கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற வருகிறது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்துவிட்ட சித்தராமையா அரசு அதற்கு போதிய நிதி கிடைக்காமல் தவித்து வருகிறது. இதனை அடுத்து அரசு சொத்துக்களை பணமாக்கி மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த சித்தராமையா அரசு முடிவு செய்துள்ளது.
2025-ஆம் நிதியாண்டுக்கான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி தந்த கர்நாடக மாநில அரசு பொது மற்றும் தனியார் பங்களிப்பு கொள்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இதன்படி மாநில உள்கட்டமைப்பு திட்டங்களில் தனியாரின் பங்களிப்பை அதிகரிப்பது என கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது. கிட்டதட்ட 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக கர்நாடக மாநில அரசு தன்னுடைய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான கொள்கையில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.

இதன் மூலம் அரசுக்கு சொந்தமான குறிப்பிட்ட சில சொத்துக்களை பணமாக்கி பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. சாலைகள், துறைமுகங்கள், சுற்றுலா மையங்கள், வேளாண் செயலாக்க மையங்கள் ஆகியவற்றில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்கப்படும் என தெரிகிறது.
இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பேட்டி அளித்துள்ள கர்நாடக மாநில செயலாளர் மஞ்சுளா கர்நாடக மாநிலத்தில் தற்போதைய நிதி தேவைக்கு அரசு மற்றும் தனியார் பங்களிப்பு திட்டங்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். தற்போது மத்திய அரசு எப்படி அரசு மற்றும் தனியார் பங்களிப்பு திட்டங்களை செயல்படுத்துகிறதோ அதே பாணியில் கர்நாடக அரசும் திட்டங்களை வகுத்து செயல்படும் எனக் கூறியுள்ளார்.
தனியாருடன் இணைந்து என்னென்ன வகையான திட்டங்களை மேற்கொள்ளலாம், எது மாதிரியான உள் கட்டமைப்பு திட்டங்களில் தனியாரின் பங்களிப்பை அதிகப்படுத்தலாம் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த கொள்கையில் இடம் பெற்றுள்ளதாக மஞ்சுளா கூறுகிறார்.
அதே போல அரசு துறைகள் அனைத்துமே தங்கள் துறைகளில் என்னென்ன உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தலாம் அதில் எந்த திட்டங்களில் எல்லாம் தனியாரின் பங்களிப்பை கொண்டு வரலாம் என்பது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யும்படி அறிவுரை வழங்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் ஆட்சி செய்து வருகிறது. அப்போது இருந்தே பல்வேறு நிதி சிக்கலை எதிர் கொண்டு வருகிறது. இதனை சரி செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கர்நாடக மாநில அரசு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கேபி கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை நியமனம் செய்தது.
பெங்களூரு மற்றும் பெங்களூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அரசுக்கு சொந்தமான நிலங்களை எப்படி பணமாக்குவது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்த குழுவுக்கு உத்தரவிட்டது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications