கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா 2026-2027ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். குறிப்பாக பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு கட்டும் அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.
பெங்களூர் வெறும் நகரம் மட்டுமல்ல எண்ணிலடங்கா கனவுகளின் நிலம் எனக் குறிப்பிட்ட சித்தராமையா இந்தியாவிலேயே தனித்துவமான ஒரு நகரமாக பெங்களூரு திகழ்ந்து வருகிறது எனக் கூறினார். பெங்களூரு நகர மேம்பாட்டுக்காக கடந்த முறை 3000 கோடி ரூபாயை ஒதுக்கிய நிலையில் இந்த முறை அதனை 7000 கோடி ரூபாயாக உயர்த்துவதாக அவர் தெரிவித்தார்.

சில்க் போர்டு ஜங்ஷனிலிருந்து கே.ஆர். புரம் வரையிலான அவுட்டர் ரிங் சாலை திட்டத்தை மேம்படுத்துவதற்காக 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக தரத்திலான ஒரு வழித்தடம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் பெங்களூரு நகரின் சாலைகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்த அவர் நடை பாதைகள் மற்றும் 100 ஸ்கை வாக்குகள் கட்டப்படும் என்றார்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் நெட்வொர்க்காக செயல்பட்டு வருகிறது நம்ம மெட்ரோ என குறிப்பிட்ட அவர் தினமும 10 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துகின்றனர் என்றார். 2026- 27ஆம் நிதி ஆண்டில் கூடுதலாக 41 கிலோமீட்டர் மெட்ரோ வழித்தடம் கட்டி முடிக்கப்படும் என கூறிய அவர் இதன் மூலம் நாள்தோறும் 15 லட்சம் பேர் மெட்ரோ சேவையை பயன்படுத்துவார்கள் என தெரிவித்தார்.

பெங்களூருவில் போக்குவரத்து பிரச்சனை பெரிய பிரச்சினையாக இருப்பதை குறிப்பிட்டு பேசிய அவர் பெங்களூரு பிசினஸ் காரிடார் திட்டத்தில் ஒரு பகுதியாக தும்குரா சாலையிலிருந்து ஓசூர் சாலை வரை 73 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் திட்டம் வேகமாக செயல்படுத்தப்படும் என உறுதி தந்தார். இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் சாலை பணிகள் முடிந்து விடும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல வடக்கு தெற்கு காரிடார் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஹெப்பல் ஜங்ஷன் முதல் ஹெச்எஸ்ஆர் லேஅவுட் வரை மற்றும் கே.ஆர். புரம் முதல் மைசூர் சாலை வரை மொத்தம் 40 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் என்றும் இதற்காக 40,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் பிஸியான விமான நிலையமாக செயல்பட்டு வரக்கூடிய நிலையில் பெங்களூருவுக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். மத்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் தொழில்நுட்ப அறிவுரையை பெற்ற பிறகு விரிவான ஆய்வறிக்கை தயார் செய்யப்படும் என தெரிவித்தார்.
பெங்களூருக்கு அடுத்ததாக கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஐடி நகரமாக மைசூர் மேம்படுத்தப்படும் என உறுதி அளித்தார். ஏற்கனவே அங்கு 100க்கும் அதிகமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும்30,000 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு தந்திருப்பதாகவும் கூறினார். பெங்களூருவில் மக்கள் நெரிசலை குறைக்கவும், பெங்களூருவை கடந்து வளர்ச்சியை பரவலாக்கவும் பெங்களூருக்கு அடுத்ததாக மைசூர் நகரம் இரண்டாவது பெரிய ஐடி நகரமாக மேம்படுத்தப்படும் என கூறினார்.


Click it and Unblock the Notifications