பெங்களூரு: கர்நாடக அரசு சமீபத்தில் நிறுவன வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு அதிகப்படியான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற முக்கியமான கட்டுப்பாட்டை கொண்டு வந்து திரும்ப பெற்றுக்கொண்டது. இந்த மசோதாவை கொண்டு வரும் போது யார் கன்னடர்கள் என்ற விளக்கத்தை கொடுத்திருந்தது, 15 வருடம் கர்நாடகாவில் வாழ்ந்து கன்னட மொழியை எழுத, படிக்க தெரிந்த வெளிமாநிலத்தவரையும் கன்னடர்களாக கருதப்படுவார்கள் என தெரிவித்தது. இதை தொடர்ந்து வெளிமாநிலத்தவர்களுக்கு கன்னட மொழி தேர்வு வைத்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறியது குறிப்பிட்டு இருந்தது.
இதை தொடர்ந்து கர்நாடக அரசு, பெங்களூருவில் வசிக்கும் மலையாளிகளுக்கு கன்னட மொழியை கற்றுத்தரும் திட்டத்தை தொடங்கியுள்ளது. கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் இதற்காக பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் வகுப்புகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் தொழில்நுட்ப நகரமாகவும், ஸ்டார்ட் அப் நகரமாகவும் இருக்கும் பெங்களூருவில் பல்வேறு மாநிலத்தவர்களும் வந்து பணி புரிகின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்தவர் பலரும் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்டவற்றுக்கு பெங்களூருக்கு வருந்து செட்டிலாகிவிடுகின்றனர். இவர்களுக்கு கன்னட மொழியை கற்று தரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகர் முழுவதும் கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் சார்பாக 20 கன்னட மொழி கற்கும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்கள் கேரளாவில் இருந்து பெங்களூருக்கு இடம்பெயர்ந்து உள்ள மலையாளிகளுக்கு கன்னட மொழியை கற்றுத் தர உள்ளன. பெங்களூருவில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களை கருத்தில் கொண்டு தான் இத்தகைய முயற்சியை எடுத்து இருப்பதாக கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் ஆர்வமுள்ள மலையாளிகள் கன்னட மொழி மேம்பாட்டு ஆணையத்தின் மையங்களில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
கேரளா மாநில அரசு மற்றும் மலையாள மிஷன் திட்டத்தின் உறுப்பினர்களின் கோரிக்கையில் பேரில் தான் இந்த திட்டம் தொடங்கப்படுவதாக கர்நாடகா அரசு தெரிவிக்கிறது. மேலும் மூன்று மாதங்களுக்கு இந்த வகுப்புகள் நடைபெறும் என்றும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மாலை 6 மணி முதல் 7 மணி வரை என ஒரு மணி நேரம் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கர்நாடகாவில் வசிக்கும் மக்கள் கன்னட மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என கூறினார். மேலும் கன்னட மக்கள் மாநிலத்தில் கன்னட மொழி சார்ந்த ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்றும், தாங்கள் வசிக்கும் இடங்களில் தங்களை சுற்றி இருப்பவர்களுடன் கன்னட மொழியில் மட்டுமே பேச வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். நம்முடைய தாய் நிலத்தில் நம்முடைய தாய் மொழியில் பேசுவது நமக்கு மிகப் பெரிய பெருமை என கூறினார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications