பெங்களூரு: கர்நாடகாவில் ஐடி ஊழியர்கள் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்ற மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலை இந்த முன்மொழிவை எதிர்த்து ஐடி ஊழியர்கள் மின்னஞ்சல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதன்படி ஐடி நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஒவ்வொரு ஊழியரும் கர்நாடக முதலமைச்சர் மற்றும் கர்நாடக தொழில்துறை அமைச்சர் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர்.
பணி நேரத்தை அதிகரிப்பதை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் அனைவரும் இந்த மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர். அதில் தாங்கள் ஏன் 14 மணி நேரம் வேலையை எதிர்க்கிறோம் என்ற காரணத்தையும் ஊழியர்கள் குறிப்பிட்டு அனுப்பலாம் என ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961ஐ திருத்தம் செய்வது குறித்து அம்மாநில அரசு கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது. இந்த திருத்தத்தில் ஐடி நிறுவன ஊழியர்களின் பணிநேரத்தை 14 மணி நேரமாக(12 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல்) மாற்ற வேண்டும் என ஐடி நிறுவனங்கள் முன்மொழிவை கொடுத்துள்ளன. தற்போது தொழிலாளர் சட்டங்கள் 12 மணி நேரம் (10 மணி நேரம் +2 மணி நேரம் கூடுதல்) என்ற வகையில் வேலை நேரத்தை அனுமதிக்கின்றன.
ஐடி நிறுவனங்களின் புதிய முன்மொழிவில் IT/ITeS/BPO ஆகிய துறைகளில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் கொதித்தெழுந்துள்ள ஐடி ஊழியர்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இதனிடையே மசோதா தொடர்பாக அரசு எந்த ஒரு முடிவினையும் அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ள தொழில்துறை அமைச்சர் சந்தோஷ், ஐடி நிறுவனங்கள் தரப்பிலிருந்து தான் அழுத்தம் வருகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த மசோதா ஐடி நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டதே தவிர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவின் முன் முயற்சி கிடையாது எனக் கூறினார்.
முன்னதாக கர்நாடக சட்டப்பேரவையில் இது தொடர்பாக விளக்கமளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கார்கே, இந்த மசோதா நீண்ட நேரம் பணி செய்யக்கூடிய தேவை இருக்கின்ற உற்பத்தி துறை மற்றும் சேவை சார்ந்த துறைகளுக்கு தான் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.
பேக்கேஜிங் மற்றும் உற்பத்தி துறையை போன்ற குறிப்பிட்ட துறை சார்ந்தவர்களிடமிருந்து தான் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்றும் இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தாது என்றும் விளக்கியுள்ளார்.அனைவரின் கருத்துக்களையும் கேட்ட பிறகுதான் அரசு இந்த மசோதா மீது முழுமையான முடிவை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இருந்தாலும் ஐடி ஊழியர்கள் சங்கம் இந்த விளக்கங்களால் சமாதானம் ஆக வில்லை.
Story written by: Devika


Click it and Unblock the Notifications