டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், வரும் 2025-26 நிதியாண்டில் தன்னுடைய பணியாளர்களில் 2% பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இப்போது அந்த நிறுவனம் தொழிலாளர் துறையில் இருந்தும் ஒரு புதிய சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.
கர்நாடக மாநில IT மற்றும் ITES துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் சங்கமான KITU (Karnataka State IT/ITeS Employees Union), ஜூலை 30-ஆம் தேதி தொழிலாளர் துறையில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளது. தொழிலாளர் துறையின் கூடுதல் ஆணையர் மஞ்சுநாத்தை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யும் முன் ஊழியர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியது அவசியம். இல்லையெனில், இது சட்டப்படி தவறானது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல், கர்நாடக அரசால் விதிக்கப்பட்ட சேவை விவரங்களை அறிவிப்பதற்கான நிபந்தனைகளையும் டிசிஎஸ் நிறுவனம் மீறியிருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே, டிசிஎஸ்-இல் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. KITU-வின் இந்த நடவடிக்கை ஐடி ஊழியர்களின் உரிமைகள் குறித்த பெரிய விவாதத்தை தூண்டியுள்ளது.
KITU சங்கம் அளித்த புகாரின் பேரில், டிசிஎஸ் மேலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கர்நாடக மாநில தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சமரச கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
KITU வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிசிஎஸ் நிறுவனம் இந்திய தொழிலாளர் சட்டங்களை முற்றிலும் மீறியுள்ளது. Industrial Disputes Act, 1947 படி, நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் வைத்திருக்கும் நிறுவனங்கள், வேலைவிடுப்பு (layoff) அல்லது பணிநீக்கம் செய்யும் முன் அரசின் அனுமதி பெற வேண்டும். ஊழியர்களை வெளிப்படையாக வேலைவிடுப்பதற்குப் பதிலாக ராஜினாமா செய்ய வற்புறுத்தும் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது" என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
அதேபோல், நிறுவனத்தின் வேலைவிடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மேலும் ஒரு ஊழியர் சங்கமான The Nascent Information Technology Employees Senate (NITES)வும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, டிசிஎஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு வருமாறு மத்திய தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications