12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஆன்மீக திருவிழா தான் இந்த மகா கும்பமேளா.. இதில் ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொள்வதாக நம்பப்படுகிறது. இந்த திருவிழாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூட உள்ளதால் பல்வேறு வணிகங்களும் களைக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பிரயாகராஜில் நடைபெறும் 2025-ஆம் ஆண்டு மகா கும்பமேளாவிற்காக கர்நாடகா பால் கூட்டமைப்பு சாய் பாண்ட் என்ற தேநீர் கஃபே நெட்வொர்க்குடன் கூட்டு சேர்ந்து செயல்படவுள்ளது. கும்பமேளா ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதன் காரணமாக சாய் பாய்ண்ட் மகா கும்பமேளா நடைபெறும் வளாகத்திற்குள் 10 புதிய கடைகளை நிறுவியுள்ளது. இந்த கடைகளின் மூலம் 1 கோடி டீ வழங்க தயாராக உள்ளன. ஒரே நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான டீ-க்களை விற்பனை செய்து கின்னஸ் சாதனையை படைக்கும் நோக்கில் இந்த ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு விற்பனை செய்யப்படும் டீ-க்காக நந்தினி பால் பயன்படுத்தப்பட உள்ளது.

கூடுதலாக சாய் பாயிண்ட்ஸ் கடைகளில் இந்த பிரம்மாண்ட ஆன்மீகக் கூட்டத்தில் நந்தினி பிராண்டின் ஸ்வீட்கள் மற்றும் மில்க் ஷேக்குகள் உட்பட பல்வேறு தயாரிப்புகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த கூட்டணியின் மூலம் இந்தியாவின் வடக்கில் உள்ள சந்தைகளிலும் நந்தினி பிராண்ட் தனது தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. மேலும் உயர்தர பால் பொருட்களை வழங்குவதற்காக தங்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டுவதாக கர்நாடகா பால் கூட்டமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
மேலும் இந்த கூட்டணி குறித்து பேசிய கர்நாடகா பால் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் பி.சிவசாமி 2025-ஆம் ஆண்டின் மகா கும்பமேளாவிற்காக சாய் பாயிண்டுடன் கூட்டு சேர்வதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்திருந்தார். நந்தினி தனது தயாரிப்புகளை பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நபர்களுக்கு காட்சிப்படுத்தவும் நாட்டின் வடக்கு பகுதிகளிலும் எங்களுடைய இருப்பை அதிகப்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக கருதுவதாக தெரிவித்திருந்தார்.
2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற கும்பமேளாவில் 24 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்ற நிலையில் 2025-ஆம் ஆண்டில் நடைபெறும் இந்த கும்பமேளாவில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பாளர்கள் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications