கர்நாடக மாநில தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், எலக்ட்ரிக் இரு வாகன நிறுவனமான ஏதர் எனர்ஜி (Ather Energy) மகாராஷ்டிராவில் தனது புதிய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கத் தேர்வு செய்ததற்கு, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மெட்ராஸ் ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் உருவான ஏதர் எனர்ஜி இந்திய எலக்ட்ரிக் இரு வாகனச் சந்தையில் பெரும் மதிப்பைப் பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் தரமான வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டதாக விளங்குகிறது.

ஏதர் எனர்ஜி தற்போது ஓசூரில் 2 தொழிற்சாலைகளை வைத்துக்கொண்டு இந்திய சந்தைக்குச் சேவையான அனைத்து வாகனங்களையும் தயாரித்து வருகிறது. அதன் தயாரிப்புகளை வட இந்தியாவில் அதிகம் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக ஏதர் எனர்ஜி சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்காக ஒப்பந்தம் செய்தது.
பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்ட ஏதர் எனர்ஜி நிறுவனம், பெங்களூருவில் தனது உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க 50 ஏக்கர் நிலம் கோரியிருந்தது. ஆனால், முன்னாள் கர்நாடக பசவராஜ் பொம்மை அரசு 35 ஏக்கர் நிலத்தை மட்டுமே ஒதுக்கியது. இதில், ஐந்து ஏக்கர் நிலம் சர்ச்சையில் சிக்கியது.
இதனால் சலிப்படைந்த முதலீட்டாளர், ஒதுக்கப்பட்ட முழு நிலத்தையும் அரசுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டு , மகாராஷ்டிராவுக்கு இடம் பெயர்ந்து தற்போது அங்கு பெரும் தொழிற்சாலையை அமைக்க உள்ளனர் என்று அமைச்சர் பாட்டீல் தெரிவித்தார்.
ஏதர் எனர்ஜியின் ரூ.2,000 கோடி முதலீட்டையும், 4,000 வேலைவாய்ப்புகளையும் மகாராஷ்டிராவுக்கு இழக்கச் செய்ததற்குப் பதிலாக, காங்கிரஸ் அரசு மற்றவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகிறது என்று எதிர்க்கட்சி (பாஜக) துணைத் தலைவர் அர்விந்த் பெல்லாட் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏதர் எனர்ஜி நிறுவனத்திற்கு போதுமான நிலம் வழங்காததே இழப்புக்கு முக்கியக் காரணம் என்றும், இதற்கு முந்தைய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறியுள்ளார்.

இதற்கு எதிர்க்கட்சி, காங்கிரஸ் அரசின் அலட்சியமே இந்த இழப்புக்குக் காரணம் என்று பதிலளித்துள்ளது. இது தொடர்பான விவாதம் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கூட நடைபெற வாய்ப்புள்ளதாகப் பேச்சு நிலவுகிறது.
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு துறையில் இந்தியாவில் தமிழ்நாடு முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுத்த காரணத்தால் ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்களைப் பெற்றது. இத்துறையில் இன்றளவும் கர்நாடக மாநிலம் பின்தங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications