இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமாக விளங்கும் பெங்களூரு, தாங்க முடியாத போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக மக்கள் தொகை காரணமாக சிக்கலில் இருக்கிறது. இந்த நெருக்கடியை குறைப்பதற்கும், மாநிலத்தின் வளர்ச்சியை எல்லா நகரங்களுக்கும் சமமாக கொண்டு செல்வதற்கும், கர்நாடக அரசு ஒரு புதிய மற்றும் அதிரடியான திட்டத்தை அறிவித்துள்ளது. புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை 2025-2030-இன் கீழ், பெங்களூருவில் இயங்கி வரும் அல்லது புதியதாக தொடங்கப்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள், இரண்டாம் நிலை நகரங்களுக்கு மாறினால், ரூ.2 கோடி வரை மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
வெளியேறினால் கிடைக்கும் சலுகைகள் : இந்த திட்டத்தை அரசு "பெங்களூருக்கு அப்பால்" (Beyond Bengaluru) என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் பெறக்கூடிய முக்கிய நிதிச் சலுகைகள் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

வாடகைச் செலவு: நிறுவனம் செலுத்தும் வாடகையில் 50 சதவீதம் வரை திரும்பப் பெறலாம். அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை இந்த உதவி கிடைக்கும்.
சொத்து வரிச் சலுகை: முதல் 3 ஆண்டுகளுக்கு சொத்து வரியில் 30 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படும்.
மின்கட்டணம் தள்ளுபடி: 5 ஆண்டுகளுக்கு மின்கட்டணத்தை 100% செலுத்த தேவையில்லை.
இணைய செலவு: இணையம் மற்றும் ஃபோன் கட்டணங்களில் 25 சதவீதம் வரை அரசு திரும்ப அளிக்கும்.
ஆராய்ச்சி மானியம்: AI, பிளாக்செயின் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் ஆய்வு செய்யும் நிறுவனங்கள், ரூ.50 கோடி வரை ஆராய்ச்சி செலவில் 40 சதவீதத்தை மானியமாகப் பெறலாம் என தெரிவித்துள்ள கர்நாடக அரசு, இத்திட்டத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுமார் ரூ.960 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
எந்தெந்த நகரங்களுக்கு மாறலாம்..?: இந்தச் சலுகைகளைப் பெற விரும்பும் நிறுவனங்கள், பெங்களூருக்கு வெளியே உள்ள பெரிய நகரங்களான மைசூரு, மங்களூரு, ஹூப்பள்ளி-தாரவாட், பெலகாவி, கல்புர்கி, சிவமொக்கா, தாவணகெரே அல்லது துமகூரு போன்ற நகரங்களில் தங்கள் அலுவலகத்தை அமைத்துக் கொள்ளலாம்.
இதுகுறித்து முதலீட்டு வங்கியாளர் சர்தக் அஹுஜா கூறுகையில், "உண்மையாகவே, கர்நாடக அரசு தங்கள் அலுவலகத்தை பெங்களூருவை விட்டு வெளியேற்றும் நிறுவனங்களுக்குப் பணம் கொடுக்கிறது. இது மிகப்பெரிய வாய்ப்பு" என்று தெரிவித்துள்ளார்.
முதலில் வருபவருக்கே சலுகை : இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஒரு முக்கியமான நிபந்தனை உள்ளது. ஒவ்வொரு சலுகைக்கும் அதிகபட்சமாக 100 விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே, முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். இதற்கான விரிவான விண்ணப்ப நடைமுறைகள் டிசம்பர் மாத தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பெங்களூருவில் தொழில் செய்து வரும் நிறுவனங்களுக்கு, தங்கள் செலவைக் குறைத்துக் கொண்டு, மாநிலத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த இது ஒரு பொன்னான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications