மங்களூரு: கர்நாடகாவின் மங்களூரில் கூடிய விரைவில் கேரளாவின் கொச்சியை போலவே நீர் வழி மெட்ரோ போக்குவரத்து தொடங்க உள்ளது. கர்நாடக கடல் சார் வாரியம் மங்களூரு வாட்டர் மெட்ரோ திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஒருங்கிணைந்த நீர்வழிப் போக்குவரத்து அமைப்பு உருவாக்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த நீர் வழி போக்குவரத்துக்கு தேசிய நீர்வழி பாதைகள் குறிப்பாக நேத்ராவதி மற்றும் குருப்புரா நதிகள் மீது உள்ள நீர் வழிப்பாதைகள் பயன்படுத்தப்பட உள்ளன.

பல கட்டங்களாக இந்த நீர்வழி மெட்ரோ திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர கர்நாடகா முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 30 கிலோமீட்டர் தொலைவில் நேத்ராவதி மற்றும் குருப்புரா நதிகளின் மீது இந்த நீர்வழி மெட்ரோ போக்குவரத்து தொடங்க உள்ளது.
முதல் கட்ட போக்குவரத்தில் 17 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. நேத்ராவதி நதியின் மீது உள்ள பஜாரில் இருந்து குருப்புரா நதியின் மீதுள்ள மறவூர் பாலம் வரை இந்த வழித்தடம் அமையும். இந்தியாவிலேயே முதன்முறையாக கொச்சியில் தான் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதற்கு அடுத்ததாக இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நீர்வழி போக்குவரத்து திட்டமாக மங்களூரு மெட்ரோ வாட்டர் மெட்ரோ திட்டம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையிலும் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டும் இந்த திட்ட அறிக்கை உருவாக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நீர்வழி மெட்ரோ போக்குவரத்துக்கு நவீன மின்சார படகுகளும், டீசலில் இயங்கும் கட்டுமர படகுகளும் பயன்படுத்தப்படும் என்றும் அதில் பல்வேறு நவீன அம்சங்கள் சேர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது பேசிய முதலமைச்சர் சித்தராமையா கர்நாடகாவில் வாட்டர் மெட்ரோ சேவைகள் கொண்டு வரப்படும் எனக் கூறியிருந்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக கேரள மாநிலம் கொச்சியில் தான் வாட்டர் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்த நீர் வழி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்தார். இதில் 100க்கும் அதிகமான படகுகள் செயல்படுகின்றன.
பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இவை செயல்படுகின்றன. கொச்சி வாட்டர் மெட்ரோவில் 100 பயணிகள் பயணிக்கும் வகையிலான படகு மற்றும் 50 பயணிகள் பயணிக்கும் வகையிலான படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதே போல கடந்த ஜனவரி மாதம் அயோத்தியின் சராயு நதியின் மீது இதேபோல வாட்டர் மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட்டன.


Click it and Unblock the Notifications