பெங்களூரு: ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் கர்நாடக மாநிலத்தில் 6450 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. கர்நாடகாவில் தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில் மற்றும் அமைச்சக உயரதிகாரிகள் அளவிலான உயர்மட்ட குழு இரண்டு வாரங்களுக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.
இந்த சுற்றுப்பயணம் குறித்து அமைச்சர் பாட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது தங்களது சுற்றுப்பயணங்களில் ஆறு நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும் இதன் காரணமாக கர்நாடகாவில் சுமார் 1000 வேலை வாய்ப்புகள் உருவாக்கும் என்றும் தெரிவித்தார். ஜூன் 24ஆம் தேதி தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொடங்கிய சுற்றுப்பயணம் ஜூலை 5ஆம் தேதி முடிவடைந்தது.

இரு நாடுகளிலும் பல்வேறு துறை சார்ந்த தலைவர்களையும் பல்வேறு நிறுவனங்களின் முதலாளிகளையும் அமைச்சர் பாட்டில் சந்தித்து பேசி இருக்கிறார். கிட்டத்தட்ட 200 நிறுவனங்களை பார்வையிட்டதாகவும் 35 துறை சார்ந்த தலைவர்களை சந்தித்து பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி ஒசாகா கேஸ் நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
அதேபோல டி.என்.சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆலை அமையும் என தெரிகிறது. இதன் மூலம் சுமார் 350 வேலை வாய்ப்புகள் உருவாகலாம். அடுத்து ஜப்பானை சேர்ந்த வாகன பாகங்கள் உற்பத்தியாளரான ஐயோமா சைசா குஷோ நிறுவனம் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இங்கே உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த பயணத்தின் மூலம் வாகனம், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அமைச்சர் பாட்டீல் கூறியுள்ளார். கூடுதலாக 25,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பினையும் கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளார். தங்களுடைய சுற்றுப்பயணம் தொடர்பாக மத்திய அமைச்சர் டி குமாரசாமி அவர்களிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் அமைச்சர் குமாரசாமியை நேரில் சந்தித்து தங்களது திட்டங்கள் குறித்த முன்வடிவை சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
கர்நாடகாவில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தி தரும் என கூறிய அவர், செமி கண்டக்டர் நிறுவனங்களுக்கான உதவிகளை செய்து தர அரசு காத்திருப்பதாக கூறினார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications