நாட்டின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒருவர் காவேரி கலாநிதி மாறன், சன் டிவி தலைவர் கலாநிதி மாறனின் மனைவி தான் அவர். அவரது வர்த்தக பயணத்தை தெரிந்து கொள்வதற்கு முன் கொஞ்சம் சன் டிவி வரலாறை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனுமான கலாநிதி மாறன் 1993ல் சன் டிவியை தொடங்கினார். ஆரம்பத்தில் சில மணி நேரங்கள் மட்டுமே ஒளிபரப்பானது. அதன் பிறகு படிப்படியாக வளர்ச்சி கண்டது.

கடந்த 30 ஆண்டுகளில் சன் டிவி தென்னிந்தியாவை தாண்டி மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்திலும் பொழுதுபோக்கு ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 6 மொழிகளில் 30க்கும் மேற்பட்ட சேனல்களை சன் டிவி நடத்தி வருகிறது. இது தமிழ் மொழியில் சுமார் 40 சதவீத பார்வையாளர்களின் பங்கினை கொண்டு இந்தியாவின் அதிகமானோரால் பார்க்கப்பட்ட சேனல்களில் ஒன்றாக விளங்குகிறது.
டி.வி. சேனல்கள் மட்டுமல்ல எஃப்.எம். வானொலி நிலையங்கள், திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான சன் பிக்சர்ஸ், ஐ.பி.எல். அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தென்னாரிப்பிரிக்காவின் டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி ஆகியவற்றையும் சன் டி.வி. நெட்வொர்க் கொண்டுள்ளது.
சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.4,000 கோடி வருவாய் ஈட்டுகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், கலாநிதி மாறனின் மனைவியுமான காவேரி கலாநிதி மாறன் பேட்டி ஒன்றில் கூறியதாவது: நிறுவனம் தொடங்கிய ஆரம்ப நாட்களில் குறைந்த அளவில் தான் பணியாளர்கள் இருந்தார்கள். அப்போது என்னை வணிகத்தில் பங்கேற்க எனது கணவர் தூண்டினார்.
இதனையடுத்து சில வர்த்தக சுமைகளை பகிர்ந்துக்கொள்ள நான் அவருக்கு உதவ தொடங்கினேன். வணிகம் வளர்ந்ததால் தவிர்க்க முடியாமல் நிறுவனத்தில் அதிக பொறுப்புகளை நான் ஏற்க அது வழிவகுத்தது.
இன்று ஓடிடி புரட்சி ஏற்பட்டுள்ளபோதிலும், இந்தியாவில் இன்னும் 10 கோடி வீடுகளில் கேபிள்கள் அல்லது டி.டி.எச். இணைப்பை பயன்படுத்தி மக்கள் டி.வி. பார்க்கிறார்கள். இது பெரிய எண்ணிக்கை, இந்த பிரிவு விரைவில் காணாமல் போகாது. சன் குழுமத்தின் ஓடிடி செயலியான Sun NXT, கேட்ச்அப் உள்ளடக்கம் மற்றும் விரிவான சினிமா லைப்பரியை வழங்குகிறது. இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நான் நிறைய டிவி பார்க்கிறேன். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நாங்கள் படைப்பாளர்களுடன் சந்திப்புகளை நடத்துகிறோம். அந்த சந்திப்பில் கருத்துக்கள் வெளிப்படையாக விவாதிக்கப்படும். எனவே நான் எதை பற்றி பேசுகிறேன் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். விமர்சனம் மிகவும் முக்கியமானது என்று என் கணவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார் என்று தெரிவித்தார்.
அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கன்டென்களையும் கண்காணிக்க, ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளடக்கிய நிறுவனத்துக்குள் குழு அமைக்கப்பட்டுள்ள 6க்கும் அதிகமான கமிட்டிகளை காவேரி கலாநிதி மாறன் திறமையாக நிர்வாகம் செய்து சன் நெட்வொர்க் வளர்ச்சி உறுதுணையாக உள்ளார்.


Click it and Unblock the Notifications