குஜராத்: பிரபல எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனமான கேனஸ் டெக்னாலஜி (Kaynes Technology) குஜராத் மாநிலத்தில் தன்னுடைய செமி கண்டக்டர் ஆலையை நிறுவுவதற்கான நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. சுமார் 5000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆலை அமைய இருப்பதாக தெரிகிறது. கேனஸ் டெக்னாலஜி நிறுவனம் இந்த ஆலையில் சிப் பரிசோதனை மற்றும் சிப் ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக கேனஸ் செமிகான் என்ற துணை நிறுவனத்தை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த நிறுவனம் முதலில் 3000 கோடி ரூபாய் முதலீட்டில் தெலுங்கானாவில் ஆலையை நிறுவுவதாக முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது குஜராத்தில் தங்களுடைய ஆலையை நிறுவுவதற்கு முடிவு செய்து அதற்கான நிலத்தையும் கையகப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

தெலுங்கானாவில் தங்களுடைய ஆலையில் printed circuit போர்டுகளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என கேனஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே குஜராத் அரசு தங்களுடைய மாநிலத்தை செமி கண்டக்டர்கள் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக சனாந்த் மற்றும் தொலேரா ஆகிய பகுதிகள் செமி கண்டக்டர் உற்பத்தி மையங்களாக உருவாகும் எனவும் அதற்கு பல்வேறு நிறுவனங்களுக்கு ஆலைகளை நிறுவுவதற்கான அனுமதிகளை வழங்கி வருவதாகவும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
இதனிடைய கேனஸ் நிறுவனம் 2030ஆம் ஆண்டுக்குள் தங்களது நிறுவனம் சிப் உற்பத்தியில் 3,500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக பல்வேறு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 13 சிப் ஒருங்கிணைப்பு மற்றும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என்றும் கேனஸ் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது தெலுங்கானாவில் தயாராகி வரக்கூடிய 46 ஏக்கர் பரப்பளவிலான ஆலை ஆகஸ்ட் இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் என கேனஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் கேனஸ் நிறுவனத்தின் வருமானம் 504 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 70% அதிகமாகும். அதே போல நிறுவனத்தின் வருமானமும் 100% உயர்ந்து 50 கோடி ரூபாயாக இருக்கிறது. ஜூன் மாத நிலவரப்படி இந்த நிறுவனத்தின் வசம் 5040 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் இருக்கின்றன.
ஏற்கனவே மைக்ரான் டெக்னாலஜி, டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சிஜி பவர் ஆகிய நிறுவனங்கள் குஜராத்தில் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைகளை நிறுவி வருகின்றன.
Written by: Devika


Click it and Unblock the Notifications