பெங்களூர்: பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் 2024-ஆம் ஆண்டில் மட்டும் 40.7 மில்லியன் பயணிகளை வரத்தைக் கையாண்டுள்ளது. இது 2023-ஆம் ஆண்டை விட சுமார் 9.5 சதவீத அதிகரிப்பாகும். இதன் மூலம் கெம்பேகவுடா விமான நிலையம் உலகில் உள்ள பெரிய விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற நிர்ணயிக்கப்பட்ட அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், பெங்களூரு விமான நிலையம் 37.2 மில்லியன் பயணிகளைப் பதிவு செய்தது. பயணிகள் போக்குவரத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு குறித்து பெங்களூரு சர்வதேச விமான நிலையம் (BIAL) வெளியிட்ட அறிக்கையில், பயணிகளின் வரத்து அதிகரித்ததற்கு தினசரி விமான போக்குவரத்தின் அதிகரிப்பு மற்றும் பல புதிய உள்நாட்டு மற்றும் சர்வதேச தடங்களின் தொடக்கம் ஆகியவை உதவியதாகக் கூறியுள்ளது.

2024-ஆம் ஆண்டின் அக்டோபர் 20-ஆம் தேதி அன்று பண்டிகை காலத்தை முன்னிட்டு கெம்பேகவுடா விமான நிலையத்தில் அதிகபட்சமாக 1.2 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணித்தனர். 2024-ஆம் ஆண்டில் மட்டும் இந்த விமான நிலையத்தில் 11 புதிய உள்நாட்டு மற்றும் 4 சர்வதேச வழித்தடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17 அன்று 782 விமானங்கள் இயக்கப்பட்டு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் சாதனை படைத்தது.
பெங்களூரில் உள்ள இந்த விமான நிலையம் 2024-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு மிகப்பெரிய நற்பெயரை பெற்று தந்தது. விமான போக்குவரத்து துறையில் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் தலைமைத்துவத்திற்கான களத்தை கெம்பேகவுடா விமான நிலையம் அமைத்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிறப்பான செயல்பாட்டுக்காகவும், ஒப்பற்ற பயணிகள் அனுபவத்தை வழங்குவதற்காகவும் இது எங்களின் உறுதிபாட்டை பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கெம்பேகவுடா விமான நிலையத்தின் பட்டியலில் 11 புதிய உள்நாட்டு மற்றும் 4 சர்வதேச வழித்தடங்கள் சேர்க்கப்பட்டதன் காரணமாக KIA சேவை செய்யும் மொத்த இடங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த விமான நிலையம் விர்ஜின் அட்லாண்டிக், சலாம் ஏர், மந்தா ஏர் மற்றும் ஃப்ளை91 போன்ற புதிய விமான கூட்டாளர்களை சேர்த்து இந்தச் சாதனையை எட்டியுள்ளது. உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ மட்டும் 46 வாராந்திர சர்வதேச விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
2024-ஆம் ஆண்டில் 3,700-க்கும் மேற்பட்ட தினசரி இருக்கைகளைக் கையாளும் விமான நிலையமாக கெம்பேகவுடா விமான நிலையம் மாறியது. இதன் மூலம் பிரபலமான சர்வதேச இடங்களான துபாய், சிங்கப்பூர், அபுதாபி, தோஹா மற்றும் லண்டன் ஹீத்ரோ போன்ற இடங்களுக்கும், அதே நேரத்தில் உள்நாட்டு பயணிகள் அடிக்கடி டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய இடங்களுக்கும் பறந்தனர்.


Click it and Unblock the Notifications