இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான அதானி குழுமம் இந்தியாவில் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்வது போல் வெளிநாடுகளிலும் சமீப காலமாக முதலீடு செய்து விரிவாக்கம் செய்து வருகிறது. இதில் முக்கியமான மின்சார திட்டம் பங்களாதேஷ் நாட்டுடன் செய்யப்பட்டதில் தற்போது 800 மில்லியன் டாலர் நிலுவைத் தொகை பிரச்சனையில் சிக்கிக்கொண்டு உள்ளது.
இந்த நிலையில் சீனா பல வருடங்களாக ஆப்பிரிக்காவில் முதலீடு செய்து பெரும் வர்த்தகத்தை வைத்திருக்கும் வேளையில், கௌதம் அதானியும் இதே பாதையில் பயணிக்கக் கென்யாவில் விமான நிலைய திட்டத்தில் முதலீடு செய்வதாக ஒப்பந்தம் கடந்த வாரம் செய்யப்பட்டது. இதற்கு தற்போது பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

கென்யாவின் உயர் நீதிமன்றம், இந்தியாவின் அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், கென்யா அரசிற்கும் இடையேயான 1.85 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதானிக்கு, நைரோபியின் ஜோமோ கென்யட்டா சர்வதேச விமான நிலையத்தை (JKIA) 30 ஆண்டுகளுக்கு இயக்க உரிமை வழங்கப்பட இருந்தது. இந்த நிலையில் கென்யாவின் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, அடுத்த தீர்ப்புகள் வரும் வரை ஒப்பந்தத்தைச் செயல்படுத்தத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியின்படி, நைரோபியின் ஜோமோ கென்யட்டா சர்வதேச விமான நிலையத்தை (JKIA) அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு வழங்கும் கென்ய அரசின் முடிவுக்கு எதிராக சட்டப்பூர்வ சவால்கள் உருவாகியுள்ளது. இதில் முக்கியமாக கென்யா மனித உரிமைகள் ஆணையம் மற்றும் வழக்கறிஞர்கள் அமைப்பு இணைந்து, இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று குற்றம்சாட்டி வழக்கு தொடுத்துள்ளனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், "நாட்டின் முக்கியமான மற்றும் லாபகரமான JKIA-ஐ தனியார் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு வழங்குவது முறைகேடானது" என்றும், இந்த குத்தகை அரசின் "ஆளுமை, பொறுப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் பொறுப்புடனும் பயன்படுத்துதல்" ஆகிய முக்கியமான கொள்கைகளை அரசு மீறுவதாகவும் குறிப்பிட்டுள்ளன.
ஆனாலும் கென்யா நாட்டு அரசு இந்த ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக நிற்கிறது, JKIA-ன் தற்போது லாபகரமாக இருந்தாலும், அதன் திறன் பிரச்சினைகள் காரணமாக இந்த விமான நிலையத்திற்குக் கட்டாயம் பெரிய அளவிலான மேம்படுத்தல் அவசியம் என்று வலியுறுத்துகிறது.
மேலும் ப்ளூம்பெர்க் செய்தியில், கென்யா ஏர்போர்ட்ஸ் ஆதாரிட்டி அமைப்பின் தற்போதைய நிர்வாக இயக்குநரான ஹென்றி ஒகோயே ஜூலை மாதம் இந்த ஒப்பந்தம் பொது-தனியார் கூட்டாண்மை சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்தார்.
இதற்காக இந்த ஒப்பந்தம் தொழில்நுட்ப, நிதியியல் மற்றும் சட்ட ரீதியான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த வழக்கின் தீர்ப்பு அதானி குழுமத்தின் கென்யா விமான நிலைய கனவிற்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications