வயநாடு மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மக்கள் தங்கள் குடும்பத்தினரையும், வீடு, வாசல், சொத்துக்களையும் இழந்து அவதிப்பட்டனர். இதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பராமரிப்பு பணிகளை செய்து வந்தது. தற்போது இந்த வயநாடு நிலச்சரிவிற்காக செலவு செய்யப்பட்ட தொகை குறித்த விவரங்களை கேரள அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது பொதுமக்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வழங்கப்பட்ட விவரங்களின்படி, நிலச்சரிவில் இறந்த உடலை தகனம் செய்ய 75,000 ரூபாயும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தன்னார்வலர்கள் மற்றும் பிற உதவிகளுக்காக 4 கோடி ரூபாயும் அரசாங்கம் செலவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகத் தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அரசு வயநாடு நிலச்சரிவின்போது ஏற்பட்ட நிதிச் செலவுகளின் விவரங்களை வழங்கியுள்ளது. அதில் வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு உணவு மற்றும் தண்ணீருக்காக ரூ.10 கோடியும், அவர்கள் தங்குவதற்கான இடத்திற்கு வாடகையாக ரூ.15 கோடியும், சூரல்மாலா மற்றும் முண்டக்காய் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கு ரூ.2 கோடி ரூபாயும், ராணுவத்தால் கட்டப்பட்ட பாலம் தொடர்பான பல்வேறு பணிகளுக்கு ரூ.1 கோடியும், மீட்புப் பணியாளர்களுக்கு டார்ச், ரெயின்கோட் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்க ரூ.2.98 கோடியும், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு மருத்துவச் செலவுக்காக ரூ.2 கோடியும், நிவாரண முகாம்களுக்கு உணவு செலவுக்காக ரூ.8 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஆடைகளுக்கான செலவினம் குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில் 4000 முகாம்களில் வசிப்பவர்களுக்கு ஆடைகளுக்காக 11 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதை வைத்து நன்கொடையாக வழங்கப்பட்ட ஆடைகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் அங்குள்ள முகாம்களில் தங்கி இருந்தவர்களுக்கு மருத்துவ செலவுக்காக 8 கோடியும். சூரல்மாலாவில் வெள்ள நீர் மேலாண்மைக்கு ரூ.3 கோடியும், 359 உடல்களை எரிக்க 2.76 கோடியும் செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பல விமர்சகர்கள் நிவாரணத்திற்காக அரசு வழங்கிய இழப்பீடு போதுமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டி வருகின்றனர். ஏனெனில் முற்றிலுமாக இடிந்த வீட்டுக்கு கேரளா அரசு ரூ.1.30 லட்சமும், சேதமடைந்த விளை நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 50,000-த்திற்கும் குறைவாக இழப்பீடு வழங்குகிறது.


Click it and Unblock the Notifications