குங்குமப்பூ என்றாலே நம் நினைவுக்கு வருவது காஷ்மீர் தான். அங்குள்ள குளிர்ந்த கால நிலை குங்குமப்பூ வளர்வதற்கு ஏற்ற சூழல். ஆனால் வெப்பமண்டல பகுதியிலும் குங்குமப்பூவை விளைவிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் திருச்சூரைச் சேர்ந்த ஒருவர். இதில் சுவாரசியம் என்னவென்றால் குங்குமப்பூ சாகுபடி செய்ய அவர் பயிற்சி எதுவும் பெறவில்லை. வெறும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் வீட்டிலேயே குங்குமப்பூவை விளைவித்து.. அதை கிராமுக்கு 650 ரூபாய் என்ற விலையில் விற்பனையும் செய்து வருகிறார்.
ஜேம்ஸ் கப்பானி சவுதி அரேபியாவில் உள்ள ராணுவ துறையில் சுமார் 20 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதன் பிறகு 2022-ஆம் ஆண்டில் தனது சொந்த ஊரான திருச்சூருக்கு திரும்பினார். அதன் பிறகு சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

திருச்சூருக்கு திரும்பிய பிறகு தொழில் முறை பயணமாக காஷ்மீர் சென்றார். அவர் சென்றது நவம்பர் மாதம். பொதுவாக நவம்பர் மாதங்களில் குங்குமப்பூ விளைச்சல் அதிகரிக்கும். ஊதா நிறங்களில் பூத்துக் குலுங்கிய குங்குமப்பூ வயல்களை எல்லாம் பிரமித்து பார்த்தார். பின்னர் உள்ளூர் மக்களிடம் விசாரித்த போது தான் அவை குங்கும பூக்கள் என்பது அவருக்கு தெரியவந்தது. அதில் உள்ள சின்ன சின்ன சூலகம் தான் குங்குமப்பூ என்று தெரிந்து கொண்டார்.
பின்னர் கேரளாவில் குங்குமப்பூ பயிரிட முடியுமா? என்று யோசிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் காய்கறி ஏற்றுமதி செய்து வந்தார். உள்ளூரில் போதிய அளவு உற்பத்தி இல்லாததால் பிற மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளை நம்பி இருக்க வேண்டியிருந்தது. இதனால் வேறு வழியைத் தேடினார்.
காய்கறி ஏற்றுமதிக்கு மாற்றாக குங்குமப் பூவை தேர்ந்தெடுத்தார். முதல் கட்டமாக காஷ்மீரில் இருந்து ஒரு கிலோ குங்குமப்பூ கிழங்குகளை வாங்கினார். ஆனால் குங்கும பூ சாகுபடி குறித்த எந்த ஒரு எக்ஸ்பீரியன்ஸும் அவருக்கு கிடையாது. அதன் பின்னர் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவை வளர்வதற்கு தேவையான காலநிலையை வீட்டுக்குள்ளேயே உருவாக்க முடியுமா என்ற நோக்கில் செயல்பட்டார்.
2025-ஆம் ஆண்டில் திருச்சூரில் உள்ள தனது வீட்டு மொட்டை மாடியில் 150 சதுர அடி பரப்பளவில் ஃபார்ம் ஒன்றை உருவாக்கினார். அந்த ஃபார்மில் சில்லர், கிரோ லைட் மற்றும் ஹுமிடிப்பையர் போன்ற சாதனங்களை பொருத்தினார். மண்ணில்லாமலும் குங்கும பூக்களை விளைவிக்க முடியும். அதற்கு ஏற்ப வேர்களுக்கு தேவையான நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்க ஏரோபோனிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.
ஜேம்ஸின் மகன்கள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறைக்கு தேவையான வெளிச்சம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை வழங்கினார். இதற்கு மனிதத் தலையீடு எதுவும் தேவையில்லை. குங்குமப்பூ அறுவடைக்கு மட்டும் அறைக்குள் சென்றால் போதுமானது. அனைத்தையும் சிஸ்டமே கண்ட்ரோல் செய்து விடும்.
ஆரம்பத்தில் ஒரு கிலோ கிழங்குகளின் மூலம் பயிற்சி பெற்றுக்கொண்டு பின்னர் 2500 முதல் 3000 ரூபாய் கிலோவுக்கு கொடுத்து 150 கிலோ குங்குமப்பூ கிழங்குகளை வாங்கினார். அவற்றை 180 தட்டுகளில் நட்டார். முதல் முறை அறுவடை செய்த போது 400 கிராம் குங்குமப்பூ கிடைத்தது. ஒரு கிராம் குங்கும பூவை 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்தார்.
இந்த 2026-ஆம் ஆண்டிலும் மீண்டும் மகசூலை எதிர்பார்த்து ஜேம்ஸ் காத்திருக்கிறார். இந்த முறை 500 கிராம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார். தற்போது ஜேம்ஸ் தான் செய்யும் தொழிலை மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். மேலும் வீட்டிலேயே தானியங்கி பண்ணைகளை அமைக்கவும் உதவி வருகிறார்.
250 சதுர அடி பரப்பளவில் பண்ணை அமைக்க ரூ.15 லட்சம் வரை செலவாகிறது. இதில் 240 முதல் 300 தட்டுகளில் நட்டு வைக்கலாம். இதில் 1 கிலோ வரை குங்குமப்பூ கிடைக்கும். இதழ்களில் இருந்து குழந்தைகளுக்கு பயன்படுத்த பேபி ஆயில், குளியல் சோப் மற்றும் குங்குமப்பூ கலந்த தேன் ஆகியவற்றை தயாரித்தும் கூடுதல் வருமானம் பெற்று வருகிறார்.
தற்போது தனது தயாரிப்புகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக ஜேம்ஸ் விற்பனை செய்கிறார். ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார். நவீன விவசாயத்திலும் நல்ல லாபம் பார்க்க முடியும் என்பதற்கு ஜேம்ஸ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


Click it and Unblock the Notifications
