கேரள மாநிலத்தை சேர்ந்த 52 வயதான நபர் துபாயில் 1 மில்லியன் டாலர்கள் லாட்டரி வென்றிருக்கிறார். வேணுகோபால் முல்லைசேரி என்பவர் துபாயில் பணி புரிந்து வரும் கேரள மாநிலத்தவர். அவருக்கு வயது 52.
Dubai Duty Free's (DDF) Millennium Millionaire draw என்ற திட்டத்தின் கீழ் 1 மில்லியன் டாலர்கள் ஜாக்பாட் கிடைத்திருக்கிறது.இதன் மூலம் தன்னுடைய வாழ்க்கையின் கடினமான காலங்கள் முடிவு பெற்று நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்த புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது என வேணுகோபால் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த வேணுகோபால் கடந்த 15 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு லாட்டரிகளை வாங்கி முயற்சி செய்து வந்திருக்கிறார். 15 ஆண்டுகளில் தற்போது தான் அவருக்கு அதில் பரிசு கிடைத்திருக்கிறது. 1 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 8.3 கோடி ரூபாய் லாட்டரி மூலம் அவருக்கு கிடைத்திருக்கிறது.
ஐடி துறையில் வேலை செய்யக்கூடிய இவர் தன்னுடைய பெயரை லாட்டரி வெற்றியாளராக அறிவித்தபோது தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் அப்போது தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும் உணர்வையும் வெளிப்படுத்துவதற்கு வார்த்தையே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். தனக்கு லாட்டரி விழுந்திருக்கிறது என்ற தகவல் வந்தவுடன் எனக்கு இருந்த மிகப்பெரிய சுமை குறைந்ததாக நான் உணர்ந்தேன் என குறிப்பிட்டு இருக்கும் அவர் என்னை அவர்கள் அழைத்த போது என்ன பேசுவது என்று கூட தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தேன் என கூறியிருக்கிறார்.
கடந்த மாதம் கேரளாவுக்கு வருகை தந்த அவர் திரும்ப துபாய்க்கு சென்று இருக்கிறார். அப்போது ஏப்ரல் 23ஆம் தேதி விமான நிலையத்தில் Dubai Duty Free's (DDF) Millennium Millionaire draw லாட்டரி வாங்கினார். இந்த லாட்டரியின் 500 ஆவது பதிப்பு இது. இதன் வெற்றியாளராக இவர் வந்திருக்கிறார் . நீண்ட ஆண்டுகளாக தான் பெரும் கடன் சுமையை கொண்டிருப்பதாகவும் அதனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வாழ்க்கையே பெரும் சிக்கலில் இருந்தது நான் நம்பிய பலரும் என்னை ஏமாற்றினர் என கூறியுள்ளார்.
இந்த சூழலில்தான் என் வாழ்க்கைக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையிலும் மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் லாட்டரி எனக்கு விழுந்து இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். இனி என் பெயருக்கு முன்னால் இருந்த கடன் காரன் என்ற வார்த்தை விலகிவிடும் என தெரிவித்திருக்கிறார். தன்னுடைய கடன்களை அடைத்து விட்டு மீதம் இருக்கும் தொகையை கொண்டு முதலில் தன் குடும்பத்தினருடன் நிம்மதியாக ஒரு சுற்றுலாக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்.
பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் திரும்பி புதிதாக தொழில் தொடங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த நாடு எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு நாடு வேறு எங்கு சென்று வசிப்பதையும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது என தெரிவித்திருக்கிறார். தன்னுடைய குடும்பத்தினரையும் இங்கேயே செட்டில் செய்யப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications