ஒட்டுமொத்த கர்நாடகாவும் தேர்தல் அதிரடிகளில் பிசியாக இருந்தாலும், கடந்த சில நாட்களில் குஜராத் அமுல் பிராண்ட்டின் பால் மற்றும் தயிர் கர்நாடக மாநிலத்தில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது மட்டும் அல்லாமல் கர்நாடக அரசு நிறுவனமான நந்தினி (KMF)-ஐ நம்பி பல லட்சம் விவசாயிகள் இருக்கும் வேளையில் அமுல் வருகை மூலம் பாதிக்கும் என்பதால் அரசியல் தலைவர்கள் முதல் சாமானிய மக்கள் வரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கேரள கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (KCMMF) மில்மா என்ற பிராண்டின் கீழ் இம்மாநிலத்தில் பால், மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அமுல் வருகையை கர்நாடகா எதிர்ப்பது போல் கர்நாடகா பால் கூட்டமைப்பின் (KMF) நந்தினி கேரள மாநிலத்திற்குள் நுழைவதை KCMMF - மில்மா எதிர்க்கிறது.
கர்நாடக அரசுக்கு சொந்தமான பால் பிராண்டான நந்தினி கேரள மாநிலத்தில் சமீபத்தில் இரண்டு விற்பனை நிலையங்களைத் திறந்தது மூலம் தனது வர்த்தகத்தை கேரளாவிற்கு விரிவாக்கம் செய்துள்ளது. இதை தற்போது கேரள கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தின் பிராண்டான மில்மாவின் தலைவர் கே.எஸ்.மணி வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகாவின் KMF கேரளாவுக்குள் வந்துள்ளது "நெறிமுறையற்றது" என்று கூறினார். பால் கூட்டுறவு அமைப்புகள் பிற மாநிலத்தில் விற்பனை நிலையங்களைத் திறப்பதன் மூலமோ அல்லது உரிமையாளர்களை இணைத்துக் கொள்வதன் மூலமோ ஒருவருடைய சொந்த சந்தையில் இருந்து வெளி சந்தைகளுக்குள் நுழையும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தின் KMF துவக்கத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை மட்டுமே விற்றனர், பின்னர் பாலையும் விற்கத் தொடங்கினர், தற்போது கடைக்கு பால் விநியோகத்தைத் தொடங்கினார்கள் என கே.எஸ்.மணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குஜராத் பால் கூட்டுறவு கூட்டமைப்பான அமுல் ஏற்கனவே மதிப்பு கூட்டு பொருட்களை விற்பனை செய்துவந்த நிலையில் தற்போது பால் மற்றும் தயிரை ஆன்லைன் வாயிலாக மட்டும் விற்பனை செய்வதாக அறிவித்த போது கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் கர்நாடகாவின் KMF அதன் நந்தினி பிராண்ட் பால் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்வதற்காக கேரளாவின் சில பகுதிகளில் அதன் விற்பனை நிலையங்களைத் திறந்தது.

கர்நாடகாவின் KMF - நந்தினி இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இதை யார் செய்தாலும், அது மிகவும் ஒழுக்கக்கேடான செயலாகும். இந்த போக்கு தொடர்ந்தால் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமற்ற போட்டியை ஏற்படுத்தும். மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து ஒரே கருத்தில் கட்டுப்பட்டு வர்த்தகம் செய்ய வேண்டும் என்று கே.எஸ் மணி கூறினார்.


Click it and Unblock the Notifications