சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டம் மத்திய அரசின் மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டம் ஆகும். எந்த ஒரு இந்தியக் குடிமகனும் தங்களுடைய 10 வயது அல்லது அதற்கும் குறைவான பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவர்களின் கல்வி செலவுக்காகவும், எதிர்கால நலனுக்காகவும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் மத்திய அரசு SSY திட்டத்தில் சில முக்கிய மாற்றங்களை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.
புதிய விதிமுறை என்ன?: அக்டோபர் 1-அம் தேதி முதல் ஒழுங்கற்ற முறையில் தாத்தா பாட்டியின் பெயரால் பேரக்குழந்தைக்கு SSY கணக்கு திறக்கப்பட்டிருந்தால் அது சட்டபூர்வ பாதுகாவலரின் பெயருக்கோ அல்லது பெற்றோரின் பெயருக்கோ மாற்றப்பட வேண்டும் என்பதுதான் இந்த புதிய விதிமுறை. இந்த புதிய விதிமுறையின் காரணமாக கேரளாவை சேர்ந்த ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு தனது பேத்திக்காக மத்திய அரசின் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் எர்ணாகுலத்தை சேர்ந்த அரசு சட்டக் கல்லூரியின் முன்னாள் பிரின்சிபிலான பாலின் ரோஸ் மத்தாய் என்ற 83 வயது பெண் கணக்கு தொடங்கியுள்ளார். ஆனால் திடீரென்று அவர் தொடங்கிய கணக்கு முடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் அவர் செய்த டெபாசிட்களுக்கும் எந்த வட்டியும் கிடைக்காது என்றும் பாலினிடம் கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தற்போது புதிதாக இந்த திட்டத்திற்கு போடப்பட்ட விதிமுறைதான்.
"நான் என்னுடைய கணக்கில் 9 ஆண்டுகளாக தவறாமல் பணத்தை டெபாசிட் செய்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளில் இது போன்ற விதி பற்றி ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை" என்று பாலின் கூறியுள்ளார். பாலின் ரோஸ் தனது பேத்தி ஜரீனா தீபு கான் என்ற பெயரில் சங்கம்புழா நகர் தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கியுள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கம் போல் வருடாந்திர டெபாசிட் தொகையை செலுத்த முயன்ற போது அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் பாலின் ரோஸ் ஆன்லைனில் தனது புகாரை பதிவு செய்துள்ளார். அதன் பின் அவர் செலுத்திய தொகை மட்டும் வட்டி இல்லாமல் கணக்கை முடித்தவுடன் திருப்பித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தனக்கு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான வட்டி உட்பட 2,21,094 ரூபாய் வர வேண்டி இருக்கிறது என்று பாலின் ரோஸ் கூறியுள்ளார்.
மேலும் பாலின் ரோஸ் தெற்கு பிரிவு போஸ் மாஸ்டர் ஜெனரலின் முன் தனது பிரச்சினையை முன் வைத்ததாகவும், அதற்கு பாசிட்டிவான பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அப்படி எந்தவித பதிலும் தனக்கு வரவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தும் மக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் விதிமுறைகள் பற்றி முழுமையான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த பதிவு எடுத்துக்காட்டுகிறது. அது மட்டுமின்றி திடீரென அரசால் கொண்டுவரப்படும் விதிமுறைகள் காரணமாக பலர் இதுபோன்ற சங்கட்டமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்ப்பதற்கு அரசு தெளிவான தகவல் பகிர்வு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினால் பிரச்சனைகள் ஏற்படாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications