கேரளாவில் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பெண்ணுக்கு உதவ லுலு குழு தலைவர் எம்.ஏ.யூசுப் அலி முன்வந்துள்ளார். கேரளாவில் பிறந்த கோடீஸ்வரரான யூசுப் அலி, அந்த பெண்ணின் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்துமாறு இந்தியாவில் உள்ள தனது குழுவிற்கு அறிவுறுத்தியது மட்டுமல்லாமல், அவருக்கு ரூ.10 லட்சத்தையும் வழங்கியுள்ளார். இவருடைய இந்த செயல் அவரைப் பின் தொடர்பவர்களிடம் பெரும் பாராட்டை பெற்று தந்துள்ளது.
என்ன நடந்தது?: மலையாள ஊடகங்களின்படி, சந்தியா என்ற பெண் மற்றும் அவரது கணவர் இணைந்து 2019-ஆம் ஆண்டில் கேரளாவின் வடக்கு பரவூரில் உள்ள தங்கள் வீட்டைக் கட்டுவதற்காக ஒரு தனியார் நிறுவனத்தில் கடன் பெற்றனர். கேரளாவைச் சேர்ந்த வங்கி சாரா நிதி நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்திடம் (NBFC) ரூ.4 லட்சம் கடன் வாங்கியுள்ளனர்.

2021-ஆம் ஆண்டில் சந்தியாவின் கணவர் அவருடைய 2 குழந்தைகள் மற்றும் சந்தியாவை விட்டுச் சென்றார். அதன் பிறகு கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இதனால் கடன் தொகை வட்டியுடன் சேர்த்து கிட்டத்தட்ட ரூ.8 லட்சம் ரூபாயாக அதிகரித்தது.
கடனைச் செலுத்த முடியாத காரணத்தினால் மணப்புரம் பைனான்ஸ் வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தொடங்கியது. 3 ஆண்டுகளுக்கு முன்பு கடனைத் திருப்பிச் செலுத்துவது நிறுத்தப்பட்டதால் சந்தியாவுக்கு நான்கு முறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாகவும், NBFC நிறுவனம் கூறியுள்ளது.
சமீபத்தில் சத்யா தான் பணிபுரிந்த துணிக்கடையிலிருந்து திரும்பிய போது NBFC நிறுவனத்தின் அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் நுழைந்து பூட்டை மாற்றி அவரையும் அவருடைய குழந்தைகளையும் வெளியேற்றினர். மேலும் வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துச் செல்ல கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சந்தியாவும் அவரது குழந்தைகளும் சாலையில் தவித்த காட்சி அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவரை வீடியோவாக எடுத்து அவருடைய வீடியோ உள்ளூர் ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டது. இவருடைய கதை லூலு குழுமத்தின் தலைவரான யூசுப் அலியையும் சென்றடைந்தது. இதன் காரணமாக யூசுப் அலி அவருக்கு உடனடியாக உதவ முன்வந்துள்ளார்.
இந்தக் கடனை திருப்பி செலுத்துமாறு யூசுப் அலி தனது குழுவினருக்கு அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவருடைய உதவியினால் சந்தியா வீட்டின் சாவி அவரிடம் திரும்பக் கிடைத்தது. லுலு குழுமத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ஸ்வராஜ் சந்தியா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சாவியை வழங்கினார்.
மேலும் நிரந்தர வைப்புத்தொகை தொடங்க ரூ.10 லட்சம் தொகையும் வழங்கப்பட்டது. யூசுப் அலி இல்லாமல் இருந்திருந்தால் தானும் தன் குழந்தைகளும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருப்போம் என்று சந்தியா நன்றி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications