திருவனந்தபுரம்: நமது அண்டை மாநிலமான கேரளாவில் பட்டம் பெற்ற இளைஞர்கள் திடீரென சைக்கிள் ஓட்டும் தேர்வுக்கு வந்துள்ளனர். அவர்கள் ஏன் இந்த டெஸ்டிற்கு வந்தனர்.. இது என்ன தேர்வு என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது நாட்டில் வேலையின்மை கணிசமாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பல காரணங்களால் இப்போது வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் எப்படியாவது எதாவது ஒரு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக இளைஞர்கள் பல்வேறு விஷயங்களையும் முயன்று பார்க்கிறார்கள்.
வினோதம்: அப்படியொரு வினோதமான சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நடந்துள்ளது. கேரளா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பியூன் பணிக்குத் தேர்வாக இரண்டு தகுதிகள் தான் தேவை.. ஒன்று ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடுத்து சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்க பியூன் பணிக்கு ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் விண்ணப்பிக்கிறார்கள்.
இந்த பியூன் பணிக்காக ஒவ்வொரு ஆண்டும் கேரளாவின் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் சைக்கிள் தேர்விலும் அவர்கள் பங்கேற்கிறார்கள். சைக்கிள் என்றால் ஏதோ கல்லூரியில் வரும் தேர்வு என நினைத்து விடாதீர்கள். பியூன் பணிக்கு நன்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அதற்கான தேர்வு நடக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும் பட்டதாரி இளைஞர்களும் அதில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.
சைக்கிள் தேர்வு: கடந்த இரண்டு நாட்களில், மாநிலத்தின் பல்வேறு மையங்களுக்குச் சைக்கிள் தேர்வு நடந்த நிலையில், அதில் பல நூறு பட்டதாரி இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக எர்ணாகுளத்தில் நடந்த இந்த சைக்கிள் தேர்வில் பல பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பியூன் வேலை தான் என்றாலும் கூட இதில் தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.23,000 சம்பளமாக வழங்கப்படுகிறது.
பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு ரூ.23 ஆயிரம் சம்பளம் என்பது குறைவு என்ற நிலையில், எதற்காக இத்தனை பேர் ஆர்வமாக விண்ணப்பிக்கிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அதற்கு ஒரே காரணம் பணி நிரந்தரம்.பணி நீக்கம், ஓவர் டைம் என்று இப்போது தனியார் வேலை அழுத்தம் நிறைந்த ஒன்றாக மாறி வரும் நிலையில், அரசு வேலைகள் பாதுகாப்பு, பணி நிரந்தரம் மற்றும் ஓய்வுக் கால பலன்களையும் வழங்குகிறது. மேலும், உணவு டெலிவரி, பைக் டாக்ஸி ஆகியவற்றை ஓட்டுவதைக் காட்டிலும் இது பெஸ்ட் என்பதாலே பலரும் இதில் சேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
எதற்காக: மேலும் கேரளாவைப் பொறுத்தவரை அங்குப் பல ஆண்டுகளாகவே அரசு வேலைகளுக்குத் தனி மவுசு இருக்கவே செய்கிறது. திருமணமாகும் போது பலரும் ஆண்கள் அரசு வேலையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே இதற்குக் காரணமாகும். அப்படியிருக்கும் பொது மாதம் ரூ. 23 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது.
அதெல்லாம் சரி இந்த சைக்கிள் தேர்வு எதற்கு என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். முன்பெல்லாம் அலுவலக உதவியாளர்கள் கோப்புகள் உள்ளிட்டவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் சைக்கிள் மூலமாகவே எடுத்துச் செல்வார்கள். இப்போது பெரும்பாலும் இதற்கான தேவை இல்லை என்ற போதிலும், இந்தத் தேர்வு மட்டும் மாநிலம் முழுக்க தொடர்ந்து நடைபெறவே செய்கிறது. சைக்கிள் ஓட்டுதல் சோதனை முடிந்தவுடன், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தகட்ட டெஸ்ட் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே வேலை வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications