இந்தியாவின் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றான யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவது என்பது எளிதான காரியமல்ல. ஆயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வை எழுதினாலும், வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அத்தகைய சாதனையாளர்களில் ஒருவர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஃபேபி ரஷீத் எனும் பெண். வெறும் 25 வயதிலேயே இந்தப் பெருமைக்குரிய சாதனையைப் படைத்த ஃபேபி, சிறு வயதிலிருந்தே ஒரு சிவில் சர்வீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார். தனது கனவை நனவாக்க, அவர் செய்த கடும் உழைப்பு மற்றும் தியாகங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
ஃபேபி ரஷீத் கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பிறந்தார். இவருடைய பெற்றோர் இருவரும் டாக்டர்கள். ஃபேபி ரஷீத்-இன் தாயார் ஒரு குழந்தைகள் நல மருத்துவர். சமீபத்தில் தான் இவர் ரிட்டயர் ஆகியுள்ளார்.அவரது தந்தை ஆயுர்வேத நிபுணர்.

ஃபேபி திருவனந்தபுரத்தில் உள்ள சர்வோதயா மத்திய வித்யாலயா பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை தனது கல்வியைத் தொடர்ந்தார். சிறுவயதில் இருந்தே சிறந்த மாணவியாக இருந்த ஃபேபி வளர்ந்து ஒரு சிவில் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவை மட்டும் விடவில்லை.
10-ஆம் வகுப்பில் 96.7 சதவீதமும், 12-ஆம் வகுப்பில் 97.6 சதவீதமும் பெற்றுள்ளார் ஃபேபி. பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உயிரியல் அறிவியலில் BS-MS படிப்பைத் தொடர்ந்தார்.
அதன் பின் தனது கல்லூரி படிப்பை 2022-ஆம் ஆண்டு ஃபேபி முடித்துள்ளார். அடுத்த கட்டமாக அவர் UPSC தேர்வுக்கு தயாராகியுள்ளார். சிறந்த முறையில் பயிற்சி பெற வேண்டும் என்று எண்ணி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு இன்ஸ்டிடியூட்டில் UPSC தேர்வுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார். இது அவருக்கு இந்த தேர்வு தொடர்பான அடிப்படை விஷயங்களைப் புரிந்து கொள்ளவும், தேர்வில் வெற்றி பெறவும் உதவியுள்ளது.
மேலும் தனது முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் ஃபேபி. 2023-ஆம் ஆண்டில் UPSC தேர்வில் 71-வது இடத்தைப் பிடித்தார். படித்துக் கொண்டிருக்கும் போதே அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகி, சில பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார் ஃபேபி. ஆனால் பிரச்சனைகளை எதிர் கொண்டு வெற்றிகரமாக தனது கனவைத் தற்போது அடைந்துள்ளார்.
கடின உழைப்பு ஒருவரின் வாழ்க்கையை அப்படியே மாற்றி விடும் என்பதற்கு ஃபேபி ஒரு உதாரணம். சிறு வயதிலேயே தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் IAS தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்து உள்ளார். அவரைக் கண்டு ஈர்க்கப்பட்டு தானும் ஒரு சிவில் சர்வீஸ் அதிகாரியாக வரும் காலத்தில் ஆக வேண்டும் என்பதே ஃபேபியின் இளம் வயது கனவு. தற்போது அது நிறைவேறி உள்ளது.
ஃபேபி ரஷீத் போன்ற இளம் வயதினர், இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் தெளிவான இலக்குகளுடன், ஒருவர் எதையும் சாதிக்க முடியும் என்பதை ஃபேபி நிரூபித்துள்ளார்.


Click it and Unblock the Notifications