கேரளத்தின் முதல் தனியார் ரயில் சேவை திருவனந்தபுரத்தில் இருந்து ஜூன் 4 முதல் இயக்கப்படுகிறது. எஸ்ஆர்எம்பிஆர் குளோபல் ரயில்வேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிரின்ஸி வேர்ல்டு டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து சுற்றுலாப் பயணிகளுக்காக இந்த ரயிலை இயக்குகின்றன.
இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் யாத்ரா திட்டத்தின் கீழ் இந்த சேவை இயக்கப்படுகிறது.

இந்த சேவைக்காக இந்திய ரயில்வேயுடன் ஒரு தனியார் கூட்டு ஒப்பந்தத்தை எஸ்ஆர்எம்பிஆர் நிறுவனம் செய்துள்ளது. அதன்படி ரயில்வேக்கு சொந்தமான ஒரு ரயிலை வாடகைக்கு இந்த நிறுவனம் அமர்த்தியுள்ளது. கேரளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காகவே இந்த ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
ரயிலின் ஊழியர்கள், பிற வசதிகள் அனைத்தையும் எஸ்ஆர்எம்பிஆர் நிறுவனம் அளிக்கும். டிக்கெட் மற்றும் மார்க்கெட்டிங்கை பிரின்ஸ் டிராவல்ஸ் செய்யும்.
மும்பை, கோவா, அயோத்தி ஆகிய நகரங்களுக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. முதல் டிரிப் கோவாவுக்கு செல்கிறது. இதற்கு முன்பதிவு செய்த பயணிகள் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, கன்னூர், காசர்கோடு ஆகிய நிலையங்களில் ரயிலில் ஏறிக் கொள்ளலாம்.
ஒருநேரத்துக்கு 750 பயணிகள் வரை இதில் செல்லலாம். இந்த ரயிலில் 2 ஸ்லீப்பர் பெட்டிகள், 11 மூன்றாம் வகுப்பு ஏசி, 2 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். மருத்துவ நிபுணர்கள் உள்பட 60 ஊழியர்கள் இதில் பணியாற்றுவர். உணவு, வைஃபை வசதி, ஜிபிஎஸ் டிராக்கர் இருக்கும். ஸ்டார் ஹோட்டல் தங்கும் வசதி, உணவு, சைட் சீயிங் ஆகியவை டூர் பாக்கேஜில் அடங்கும்.
4 நாள் கோவா பயணத்துக்கு நான்-ஏசி ஸ்லீப்பருக்கு ரூ.13,999 கட்டணமாகும். 3 டயர் ஏசி கட்டணம் ரூ.15,150. 2 டயர் ஏசி கட்டணம் ரூ.16,400. மும்பைக்கு நான்-ஏசி கட்டணம் ரூ.15,050. மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.16,920. இரணடாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.18,825 ஆகும்.
8 நாள் அயோத்தி பயணத்துக்கு நான்-ஏசி கட்டணம் ரூ.30,550. மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.33,850. இரணடாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.37,150 ஆகும்.
இந்தப் பயணம் அயோத்தி, வாராணசி, பிரயாக்ராஜ் நகரங்களில் உள்ள கோயில்கள், புண்ணிய தலங்கள் ஆகியவற்றை அடக்கியது. 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு டிக்கெட்டில் பாதிக் கட்டணம் வசூலிக்கப்படும். 5 வயதுக்குள்பட்ட சிறுவர்களுக்கு டிக்கெட் கட்டணம் கிடையாது.
Story written by: I.jayachandran


Click it and Unblock the Notifications