2000 ஆம் ஆண்டு பங்குச் சந்தை ஊழலில் ஈடுபட்டு பெரும் தொகையை சம்பாதித்த பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரான கேட்டன் பரேக் உட்பட சிங்கப்பூரை தளமாகக் கொண்ட வர்த்தகர் ரோஹித் சல்கோகர் மற்றும் இன்னும் சில நபர்களை பங்குச் சந்தை தொடர்பான அனைத்து வர்த்தகத்தில் ஈடுப்பட தடை விதித்துள்ளது SEBI அமைப்பு.
ஏற்கனவே பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுப்பட 14 வருடம் தடை விதிக்கப்பட்ட கேட்டன் பரேக் தற்போது புதிய லீலைகளை அரங்கேற்றியுள்ளார். என்ன நடந்தது வாங்க முழுசா பார்ப்போம்.

சுமார் 2.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை உலகளவில் நிர்வகிக்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட வெளிநாட்டு முதலீட்டு நிதி (FPI) நிறுவனம் நடத்திய வர்த்தகங்கள் குறித்து முன்கூட்டியே ரகசியமாக தகவலை தெரிந்துக்கொண்டு அதன் மூலம் கேட்டன் பரேக் நேரடியாக முதலீடு செய்ய முடியாது என்பதால் சிறப்பு டீம்-ஐ உருவாக்கி இந்த வர்த்தகத்தை செயல்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டு, செபி தற்போது இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
188 பக்கங்களை உள்ளடக்கிய உத்தரவில், இந்த மோசடி திட்டத்தின் மூலம் ஈட்டப்பட்ட ரூ.65.77 கோடி அளவிலான சட்டவிரோதமான லாபத்தை பங்குச்சந்தை வாரியத்திற்கு திருப்பிச் செலுத்த செபி அமைப்பு கேட்டன் பரேக்-கிற்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த 65.77 கோடி ரூபாய் பணத்தை தவறான வழியில் பயன்படுத்துவதை தடுக்க, இத்திட்டத்தில் ஈடுபட்ட 22 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளையும் செபி அமைப்பு மொத்தமாக முடக்கியுள்ளது.
கேட்டன் பரேக் 14 ஆண்டுகால தடை மூலம் பங்குச் சந்தையிலிருந்து விலக்கப்பட்டிருந்த போதிலும், ஒழுங்குமுறை விதிகளுக்கு வெளியே செயல்பட்டு Front-Running டிரேடிங் முறையில் பெரும் முதலீட்டு மோசடியை அரங்கேற்றியுள்ளார். சரி யார் இந்த ரோஹித் சல்கோகர்..? இவருக்கும் கேட்டர் பரேக்-கிற்கும் என்ன தொடர்பு..?
Front-Running டிரேடிங் என்பது ஒரு பெரிய வர்த்தகம் நடைபெறுவதற்கு முன்பே இதுக்குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்துக்கொண்டு அதன் அடிப்படையில் வர்த்தகம் செய்வது.
உதராணமாக சொல்ல வேண்டும் என்றால் பிளாக்ராக் போன்ற பெரும் முதலீட்டு நிறுவனம் அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்து நாளை காலை வாங்குகிறது என வைத்துக்கொள்ளுங்கள். இதை விபரம் முக்கிய தொடர்புகள் மூலம் ரகசியமாக முன்கூட்டியே தெரிந்துக்கொண்டு, பிளாக்ராக் தனது வர்த்தகத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாகவோ அல்லது அதேநேரத்திலோ செய்யும் முறை தான் Front-Running டிரேடிங்.
இத்தகைய Front-Running டிரேடிங் முறைக்கு ரகசிய தரவுகள் மிகவும் முக்கியம். இந்த தகவலை கொடுப்பவர் தான் ரோஹித் சல்கோகர். FPI முதலீட்டாளர் செய்விருக்கும் வர்த்தகங்கள் குறித்த தகவல்களை ரோஹித் சல்கோகர் மோதிலால் ஒஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் (MOSL) மற்றும் நுவமா வெல்த் மேனேஜ்மென்ட் ஆகியவற்றுடன் ஒரு ரெபரல் ஒப்பந்தத்தின் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இந்த தகவலை ரோஹித் சல்கோகர், கேட்டன் பரேக்கிடம் வழங்கியதாக செபி விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தகவல்கள் அடிப்படையில் தான் கேட்டன் பரேக், கொல்கத்தாவில் உள்ள தனது கூட்டாளிகளின் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி பங்குகளை வாங்கியுள்ளார்.
செபி அமைப்பும், பிற துறை அதிகாரிகள் உடன் இணைந்து 2023 ஆம் ஆண்டு ஜூனில் 17 இடங்களில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு விரிவான விசாரணையை நடத்தியது. இதன் வாயிலாகவே கேட்டன் பரேக் - ரோஹித் சல்கோகர் நடத்திய மாபெரும் Front-Running டிரேடிங் முறைகேடு நடந்துள்ளது. இதன் மூலம் தற்போது மொத்தமாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது, இதேபோல் Front-Running டிரேடிங் மூலம் கேட்டன் பரேக் கூட்டணி சம்பாதித்த 65 கோடி ரூபாயை செபிக்கு திருப்பி செலுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications