கிரண் மஜும்தார்-ஷா ஒரு திறமையான தொழிலதிபராவார். இவர் சமீபத்தில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட 100 சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அதிகம் நன்கொடை வழங்கியவர்கள், உலகின் பணக்காரர்கள் போன்ற நபர்களின் பட்டியலை அவ்வப்போது ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிடும். அப்படி வெளியிடப்பட்ட 100 சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் இவர் 82-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கிரண் ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆவார். இவர் தற்போது பயோகான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி இவருடைய நிகர மதிப்பு 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்புக்கு ரூ. 28,835 கோடியாகும். இவர் இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவராக இருக்கிறார். அதேபோல பெங்களூருவின் பணக்கார பெண்ணாகவும் கருதப்படுகிறார்.

பயோடெக்னாலஜியில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்ட கிரண் உலகளாவிய வணிக தலைவராகவும் இருந்து வருகிறார். 71 வயதான கிரண் டாக்டராக விரும்பினார். ஆனால் மருத்துவ படிப்பில் சேர முடியாத காரணத்தினால் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தை முடித்தார்.
மலேசியாவின் ஜோகூர் பகுதியில் இருந்த மிகப்பெரிய இன்சுலின் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தார். பயோகான் 2022-ஆம் ஆண்டில் அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான வியாட்ரிஸின் வணிகத்தை 3.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கையகப்படுத்தியது.
கிரண் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ விருதை 1989-ஆம் ஆண்டும், பத்மபூஷன் விருதை 2005-ஆம் ஆண்டிலும் பெற்றார். 2019-ஆம் ஆண்டில் அவருடைய மறைந்த கணவரான ஜான்ஷா 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை கிளாஸ்கோப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி மையத்திற்கும், புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கும் வழங்கினர்.
இந்திய மதிப்புக்கு ரூ. 63 கோடி ரூபாயாகும். இவருடைய முயற்சியின் மூலம் கிரண் மஜும்தார்-ஷா மருத்துவ மையம் மலிவான புற்றுநோய் சிகிச்சை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கிரண் மஜும்தார்-ஷாவ், தனது திறமை, கடின உழைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையின் மூலம் உயிரி தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். பெண் தொழில் முனைவோராக விடாமுயற்சியுடன் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிய கிரண் இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்.


Click it and Unblock the Notifications