KL ராகுல் மாமனாரும், நடிகரும் முதலீட்டாளருமான சுனில் ஷெட்டி புதிய உணவு டெலிவரி செயலியான 'வாயு' என்ற புதிய நிறுவனத்தை மக்களின் சேவைக்காக அறிமுகப்படுத்தியுள்ளார்.
ONDC அறிமுகத்திற்கு பின் சோமேட்டோ, ஸ்விக்கி அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் வேளையில் சுனில் ஷெட்டி அறிமுகம் செய்துள்ள வாயு தளம் யஜீரோ கமிஷன் அடிப்படையில் உணவகங்களை இணைத்து உணவு டெலிவரி சேவையை வழங்க உள்ளது.

வாயு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ள சுனில் ஷெட்டி, நிறுவனத்தில் பங்குகளையும் வைத்திருக்கிறார். இந்த செயலி தற்போது ஒரு ஹோட்டலுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 அறிமுக விலையில் நிலையான கட்டணங்களுடன் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை அளிக்கிறது. அடுத்த சில வருடத்தில் இந்த கட்டணத்தை ரூ.2,000 ஆக அதிகரிக்கும் என்று இப்போது தெளிவுப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் ஆன ONDC உடனும் வாயு இணைக்கப்பட இத்தளம் திட்டமிட்டுள்ளது. சுனில் ஷெட்டி ஏற்கனவே பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு, அவர் பிப்ரவரியில் ஒரு ஃபிட்னஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான Aquatein-ல் வெளியிடப்படாத தொகையை முதலீடு செய்தார். அவர் ஸ்டார்ட்அப்பின் பிராண்ட் அம்பாசிடராகவும் ஆனார். 2023 ஆம் ஆண்டில் அதிக ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்வேன் என்று சுனில் ஷெட்டி தெரிவித்தார்.

Destek HORECA-ன் அனிருதா கோட்கிரே மற்றும் மாந்தர் லாண்டே ஆகியோரால் நிறுவப்பட்ட Waayu என்ற உணவு டெலிவரி செய்யும் செயலி, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு எந்தவித கமிஷனும் இல்லாமல் உணவுகளை தனது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்கிறது.
வாயு செயலி முதல்கட்டமாக மும்பையில் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. வாயு செயலியின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி இந்நிறுவனம் தற்போது மும்பையில் பிரபலமாக இருக்கும் மகேஷ் லஞ்ச் ஹோம், பகத் தாராசந்த், Banana Leaf, சிவ சாகர், குரு கிருபா, கீர்த்தி மஹால், பாரசீக தர்பார், லடு சாம்ராட் உள்ளிட்ட பல உணவகங்களை இணைத்துள்ளது.
மும்பையை தளமாகக் கொண்ட இந்திய ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் அசோசியேஷன் (AHAR) ஆதரவுடன் இயங்கும் வாயு செயலி, மும்பை BMC, மீரா பயந்தர், நவி மும்பை, தானே, புனே, பால்கர் போன்ற பல பகுதிகளில் இருக்கும் உணவகங்களையும் இணைக்கிறது. இந்நிறுவனம் மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் அதன் சேவைகள் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications