பிரதமர் மோடி தலைமையிலான அரசு 10வது பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை என்ன என்பதைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
2014ல் முதல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருளாதாரம்
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்த காரணத்தால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. இதன் மூலம் 2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 9.70 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்தது.
இதன் பின்பு தொடர் சரிவை எட்டி கொரோனாவுக்கு முந்தைய காலாண்டில் 2020 நிதியாண்டின் 3வது காலாண்டில் 3.30 சதவீதமும், 4வது காலாண்டில் 3.0 சதவீதமும் வளர்ச்சி அடைந்தது. கொரோனா காலத்தில் -24.40 சதவீதம் வரையில் சரிந்து ஜிடிபி வளர்ச்சி 2022 நிதியாண்டின் 2வது காலாண்டில் 8.40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி
உலக வங்கி நடப்பு நிதியாண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உலக வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார வளர்ச்சி கணிப்பில் இந்தியா தான் வேகமாக வளர்ச்சி அடையும் நாடாக உள்ளது. 2023ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8.7 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில், சீனா 5.1 சதவீதமும், அமெரிக்கா 3.7 சதவீதமும், ஐரோப்பா 4.2 சதவீதம் வரையில் உயரும் எனக் கணித்துள்ளது உலக வங்கி
பணவீக்கம்
உலகளவில் அதிகரித்து வரும் பணவீக்கம், வட்டி விகிதம் இந்தியாவிற்குப் பெரும் சுமையாக மாற்றியுள்ளது. டிசம்பர் மாதம் இந்தியாவின் ரீடைல் பணவீக்கம் 5.59 சதவீதம் வரையில் உயர்ந்து 5 மாத உச்சத்தைத் தொட்டு உள்ளது. இதேபோல் மொத்த விலை பணவீக்கம் 13.56 சதவீதமாக உயர்ந்துள்ளது. மே 2021ல் அதிகப்படியாக12.94 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு
CMIE அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்தியாவின் LPR அளவு அதாவது வேலைவாய்ப்பு சந்தைக்கு வரும் மக்களின் அளவு டிசம்பர் மாதம் 40.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது செப்டம்பர் 2020க்கு பின்பு அதிகப்படியான அளவீடாகும்.
2016ல் 46 சதவீதமாக இருந்த LPR அளவீடு 2021ல் 40 சதவீதம் வரையில் குறைந்துள்ளது..
மேலும் நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவீடு நவம்பர் மாதம் 7 சதவீதமாக இருந்த நிலையில் டிசம்பர் மாதம் 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜனவரி 30 வரையிலான காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை அளவீடு 6.5 சதவீதமாகச் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது உற்பத்தி, ஹோட்டல்கள், சுற்றுலா மற்றும் கல்வி ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் இழந்துள்ளது. அதே நேரத்தில் கட்டுமானம், விவசாயம் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் அதிக வேலைகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஏற்றுமதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த பின்பு நாட்டின் ஏற்றுமதி பொருட்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 300 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது, மார்ச் மாதத்திற்குள் இதன் அளவு 400 பில்லியன் டாலரை அடையலாம்.
ஜிஎஸ்டி வசூல்
டிசம்பர் மாதம் வரையில் தொடர்ந்து 6 மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் அளவுகள் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி வருகிறது. மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் வரி விதிப்பு முறையை மறுசீரமைப்பு செய்யும் பணிகளைச் செய்து வரும் நிலையில் 2022ல் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் டிசம்பர் 2021ல் 13 சதவீத அதிக ஜிஎஸ்டி வரி வருமானத்தையும், டிசம்பர் 2019-ஐ ஒப்பிடுகையில் 29 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரிப்பதன் மூலம் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை சுமை குறையும்.


Click it and Unblock the Notifications