இந்தியாவின் மறக்க முடியாத ஒரு தொழில் அதிபராக , தொழில் குழும தலைவராக இருந்தவர் தான் ரத்தன் டாடா . அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இருந்தாலும் இந்த ஓராண்டில் அவரை நினைக்காதவர்கள் இல்லை எனக் கூறும் அளவிற்கு ஒரு தொழிலதிபராக மட்டுமில்லாமல் சாதாரண மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஒரு நபராகவும் திகழ்கிறார் .
டாடா குழுமத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக செயல்படுகின்றன. ஐடி, விமானம், சில்லறை விற்பனை , ஃபேஷன் என இவர்கள் கால் பதிக்காத துறையும் இல்லை அதில் வெற்றி பெறாத இடமும் இல்லை . இருந்தாலும் ஒரு துறையில் மட்டும் ரத்தன் டாடா தோல்வி அடைந்தார். அது இந்தியாவிலேயே பணத்தை கொட்டி கொடுக்க கூடிய ஒரு துறை.

2024 ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தன்னுடைய 86 வயதில் காலமானார் ரத்தன் டாடா. டாடா குழுமத்தின் தலைவராக பதவி வகித்த 1991 முதல் தன்னுடைய இறப்பு வரையிலான காலகட்டத்தில் ரத்தன் டாடா பல்வேறு நிறுவனங்களை தொடங்கி அவற்றை புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்றார். அப்படித்தான் அவர் திரைப்பட தயாரிப்பிலும் கால் பதித்தார்.
திரைப்பட உலகில் ஒரு தயாரிப்பாளராக டாடா குழுமம் களமிறங்கியது. டாடா இஃன்போமீடியா என்ற நிறுவனத்தை தொடங்கி Aetbaar என்ற ஹிந்தி திரைப்படத்தை தயாரித்தார் ரத்தன் டாடா. 2004 ஆம் ஆண்டு அமிதாப்பச்சன், பிபாசா பாஷூ, ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் நடித்த ரொமான்டிக் சைக்காலஜி திரில்லர் திரைப்படம் இது.

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படத்தை விக்ரம் பாத் இயக்கி இருந்தார். 1996 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த ஃபியர் என்ற திரைப்படத்தை தழுவி தான் இந்த படம் எடுக்கப்பட்டது . இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
9 கோடி ரூபாய் மதிப்பில் படம் தயாரிக்கப்பட்டது ஆனால் இந்த படம் இந்தியாவில் 4 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. பாக்ஸ் ஆபீசில் இந்த படம் தோல்வி அடைந்த நிலையில் ரத்தன் டாடா திரைப்பட தயாரிப்பு தங்களுக்கு இனி ஒத்து வராது என இந்த தொழிலில் இருந்தே விலகிவிட்டார். அந்த வகையில் ரத்தன் டாடாவிற்கே சவாலாக விளங்கிய ஒரு துறை தான் சினிமா துறையாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications