மாம்பழத்தை பிடிக்காது என யாராவது சொல்வார்களா, அதுவும் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என பிரத்தியேக ருசி கொண்ட மாம்பழங்கள் இருக்கின்றன. கோடை காலம் தொடங்கினாலே வெயில் ஞாபகம் வருகிறதோ இல்லையோ இந்த கோடைகால சீசனில் கிடைக்கக்கூடிய மாம்பழ வகைகள் நிச்சயம் ஞாபகத்திற்கு வரும்.
அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், மல்கோவா என சில மாம்பழ வகைகளின் பெயர்களை சொல்லும்போதே நாவில் எச்சி ஊறும். வழக்கமாக மாம்பழம் வேண்டுமென்றால் நாம் கடைக்கு சென்று வாங்க வேண்டும், தள்ளுவண்டி கடைகளில் வாங்கிக் கொள்வோம், தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யக்கூடிய ஆப்ஷனும் வந்துவிட்டது. ஆனால் நீங்கள் நினைத்தால் ஒரு மாந்தோப்பையே சொந்தமாக்கி அதில் கிடைக்கும் அனைத்து ப்ழங்களையும் பெற முடியும் தெரியுமா.

கொச்சியை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் உங்களுக்கு மாமரத்தை வாடகையாக தருகிறது. இந்த சீசன் முழுவதும் அந்த மரத்தில் எவ்வளவு பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறதோ அந்த பழங்கள் அனைத்தும் உங்களுக்கே சொந்தம். கேரளாவை சேர்ந்த உமேஷ் தாமோதரன் என்பவர் rent a tree என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.
இந்த நிறுவனம் தமிழ்நாடு தொடங்கி மகாராஷ்டிரா வரை பல்வேறு மாநிலங்களிலும் மாந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்துள்ளது. இதில் நமக்கு தேவையான மரங்களை நாம் வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். வாடகை தொகையை மட்டும் கொடுத்து விட்டால் போதும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் மரத்தை பராமரித்து அதில் கிடைக்கக்கூடிய மாம்பழங்களை உங்களுடைய வீட்டிற்கே அனுப்பி வைத்துவிடும்.

கொச்சி சேர்ந்த தாமோதரன் முன்னதாக பெங்களூரில் வேலை செய்து வந்தாராம். பெங்களூருக்கும் கேரளாவுக்கும் பயணம் செய்த ஒரு சமயத்தில் திண்டுக்கல் வழியாக சென்றபோது அங்கிருந்து மாம்பழத்தை வாங்கிக் கொண்டு தன்னுடைய நண்பர்களுக்கு தந்துள்ளார். அப்போது ஒரு நண்பர் இந்த மரத்தில் விளையும் அனைத்து மாம்பழமும் எனக்கே கிடைத்தால் எப்படி இருக்கும் என கூறினாராம். அப்போதே ரெண்ட் ஏ ட்ரீ நிறுவனத்திற்கான விதை போடப்பட்டது என்கிறார் தாமோதரன்.
இந்த நிறுவனம் தற்போது 200 வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. தற்போது ஏராளமான விவசாயிகளும் தங்களுடைய மாந்தோப்புகளை இணைத்து தொழில் புரிவதற்கு ஆர்வம் காட்டுகிறார்களாம். குறைந்தபட்சமாக நாம் ஒரு மரத்தை 7,500 ரூபாயில் இருந்து வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும், 30 கிலோ முதல் ஒரு சீசனுக்கு உங்களுக்கு மாம்பழம் கிடைக்கும். அந்த சீசனில் கிடைக்கக்கூடிய அறுவடையை பொறுத்து உங்களுக்கு 90 கிலோ வரை கூட கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாம்.
வாரம் ஒரு முறை ஆன்லைன் வீடியோ கால் முறையில் அந்த மரத்தின் வளர்ச்சி குறித்தும் அதில் விளையும் பழங்கள் குறித்தும் உங்களுக்கு அப்டேட் செய்வார்களாம். வேண்டுமென்றால் நேரடியாக வந்து கூட இந்த மாமரத்தை நாம் பார்க்கலாமாம். ஏப்ரலில் இருந்து மே வரையிலான 45 நாட்களில் வாரத்திற்கு ஒரு முறை மாம்பழங்கள் பொட்டி போட்டியாக அதனை வாடகைக்கு எடுத்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தியாவில் கோடைக்காலத்தில் மாம்பழம் சாகுபடியும் அதிகரிக்கும் மாம்பழ விற்பனையும் அதிகரிக்கும். இந்த குறிப்பிட்ட ஒரு காலத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த தொழில் வேகமாக வளர்ச்சியடைந்து வரக்கூடிய ஒரு தொழிலாக மாறி இருக்கிறது. பாரம்பரிய விவசாயத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கும் ஒரு பிஸ்னஸ் ஐடியாவாகவும் மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications