கிரிப்டோகரன்சி சந்தையில் தினமும் புதுப்புது பெயரில் பல டிஜிட்டல் காயின்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும், இதே நேரத்தில் பல பெயர் தெரியாத கிரிப்டோகாயின் வியக்கவைக்கும் வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
சமீபத்தில் மீம் காயின்கள் பெரிய அளவில் பிரபலம் அடைந்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன் ஸ்க்விட் காயின் தடாலடியான உயர்வுக்குப் பின்பு திடீரென அதன் உரிமையாளர்கள் மாயமானார்கள். இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு கிரிப்டோகரன்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கோகோஸ்வேப்
கிரிப்டோ வர்த்தகச் சந்தையில் சமீபத்தில் இறங்கிய கோகோஸ்வேப் என்ற ஒரு டிஜிட்டல் காயின் பெரிய அளவில் யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 76,885 சதவீதம் வளர்ச்சி அடைந்து அனைத்துத் தரப்பு கிரிப்டோ முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
24 மணிநேரம்
கோகோஸ்வேப் காயின் கடந்த 24 மணிநேரத்தில் 0.009911 டாலர் அளவீட்டில் இருந்து 7.63 டாலர் என்ற மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்து மொத்த சந்தை மதிப்பு 2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பினான்ஸ் ஸ்மார்ட் செயின்
மேலும் கோகோஸ்வேப் தற்போது தனது வர்த்தகத் தளத்தை எதிரியம் அடிப்படையில் இருந்து பினான்ஸ் ஸ்மார்ட் செயின் தளத்திற்கு மாற்ற உள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் அதிகப்படியான முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய முடியும். அதுமட்டும் அல்லாமல் இதில் பினான்ஸ் தளத்தில் இருக்கும் முதலீட்டாளர்களும் கோகோஸ்வேப் காயினில் முதலீடு செய்ய முடியும்.
NFT கேமிங் அலை
கோகோஸ்வேப் தற்போது NFT கேமிங் அலையில் தாறுமாறான வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் அதிகப்படியான தடுமாற்றத்தையும் எதிர்கொண்டு வருகிறது. காயின்மார்கெட்கேப் தளத்தின் தரவுகள் அடிப்படையில் கோகோஸ்வேப் தற்போது 6.56 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பிட்காயின்
இன்று கிரிப்டோசந்தையில் பல முன்னணி கிரிப்டோகரன்சிகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாகப் பிட்காயின் 4.31 சதவீதம் சரிந்து 65,335 டாலருக்கு சரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து எதிரியம் 1.87 சதவீதம் சரிந்து 4,756.16 டாலருக்கு சரிந்துள்ளது. மேலும் சோலானோ, ரிப்பிள், கார்டானோ, போல்காடாட், டெரா, ஸ்டெல்லார் ஆகியவை அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications