இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோடக் மஹிந்திரா வங்கி வியாழன் வர்த்தகத்தில் அதன் பங்குகள் 4% சரிந்து 52 வாரங்களில் இல்லாத புதிய சரிவான ரூ.1,552.40 அளவீட்டை எட்டியது.
ஏற்கனவே ஆர்பிஐ விதித்த கட்டுப்பாடுகள், தடைகள் என கோடக் மஹிந்திரா வங்கியின் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியிருந்த வேளையில் அடுத்த முக்கிய பிரச்சனையாக இவ்வங்கி இணை நிர்வாக இயக்குநர் கேவிஎஸ் மணியன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் மோசமான செய்தியாக மாறியுள்ளது.

இந்த நிலையில் உள்நாட்டு தரகு நிறுவனமான நுவாமா, கோடக் மஹிந்திரா வங்கி பங்குகளை BUY என்ற தரத்தில் இருந்து REDUCE என குறைத்துள்ளது. இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி செய்தியாக உள்ளது.
ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் சேனல்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதிலும் மற்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்த நிலையில் கடந்த வாரம் கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் 10% சரிவில் முடிந்தது.
ஆர்பிஐ தடைக்கு சில மாதங்களுக்கு முன்பு வங்கிகளில் முழு நேர இயக்குநர்களின் பதவிக்காலம் மீதான ரிசர்வ் வங்கியின் வரம்பு காரணமாகத் தலைமை நிர்வாக அதிகாரி உதய் கோடக் மற்றும் இணை நிர்வாக இயக்குனராக இருந்த தீபக் குப்தா ஆகியோர் வெளியேறினர். இதைத் தொடர்ந்து தற்போது KVS மணியன் வெளியேற்றம் வந்துள்ளது.
இப்படி அடுத்தடுத்த பிரச்சனைகள் மூலம் கோடக் மஹிந்திரா வங்கியில் குறைந்தது 12-18 மாதங்களுக்கு வளர்ச்சி மற்றும் லாபத்தைப் பாதிக்கும் என்று தரகு நிறுவனங்கள் கணித்துள்ளது, மேலும் இலக்கு விலையை ரூ.2,095ல் இருந்து ரூ.1,530 ஆகக் குறைத்துள்ளது.
மூத்த அதிகாரி வெளியேற்றம், ஆர்பிஐ தடை ஆகியவற்றைக் காரணம் காட்டி கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலையை ரூ.1,970 என்ற இலக்கு விலையாக ஜெஃப்ரிஸ் நிர்ணயம் செய்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கியின் இணை நிர்வாக இயக்குனராக இருந்த KVS மணியன், ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் படி மே 1 முதல் தனது பதவியில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்தார்.
இந்த செய்தி கோடக் மஹிந்திரா வங்கி ஊழியர்களையும், இவ்வங்கி முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இப்போது KVS மணியன் ஃபெடரல் வங்கியில் சேர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications