இந்திய தனியார் வங்கிகளில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது கோடக் மகேந்திரா வங்கி. இந்திய பணக்காரர் உதய் கோடக்கின் கோடக் மகேந்திரா வங்கி டிஜிட்டல் முறையில் வங்கி சேவைகளை வழங்குவதில் வேகமான வளர்ச்சியை கண்டது. இந்நிலையில் கோடக் வங்கியின் டிஜிட்டல் முறை வங்கி சேவைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்தது.
கோடக் மகேந்திரா வங்கி அதன் டிஜிட்டல் தளத்தின் மூலம் கணிசமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்புக் கணக்குகளை தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி கடன் வழங்குவது, கிரெடிட் கார்டு வழங்குவது உள்ளிட்ட பெரும்பாலான சேவைகள் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்டன. இதனால் கோடக் வங்கியின் டிஜிட்டல் பேங்கிங் நல்ல வளர்ச்சி கண்டது.

இருப்பினும், கோடக்கின் டிஜிட்டல் மற்றும் பாதுகாப்பு தளங்களில் பிரச்னைகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட ரிசர்வ் வங்கி டிஜிட்டல் அமைப்புகளில் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை ,கோடக் மகேந்திரா வங்கி தரப்பில் இதுவரை வெளியிடப்பட்ட விளக்கங்கள் ஏற்க கூடியதாக இல்லை என கூறியது.
மேலும் கோடக் மகேந்திரா வங்கி டிஜிட்டல் முறையில் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பது மற்றும் புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கு தடை விதித்தது.
இந்த தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை கோடக் மகேந்திரா வங்கி தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப ரீதியாக தங்களை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது. நடப்பாண்டில் 400 பொறியாளர்களை புதிதாக பணிக்கு அமர்த்த இருப்பதாக கோடக் மகேந்திரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 500 பொறியாளர்களை பணிக்கு அமர்த்தி இருப்பதாக இந்த வங்கியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான மிலிந்த் நார்நர் தெரிவித்துள்ளார். கூகுள், அமேசான், பேடிஎம், போன் பே உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய பொறியாளர்களை தேடி தேடி பணிக்கு அமர்த்தி இருப்பதாக அவர் ஒரு நேர்காணலில் சுட்டிக் காட்டியுள்ளார்.
குறிப்பாக திறமை வாய்ந்த பொறியாளர்கள், அதிலும் ஃபின் டெக் துறை சார்ந்தவர்களை பணிக்கு அமர்த்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.கோடக் மகேந்திரா அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இதன் சேமிப்பு கணக்குகளில் சுமார் 98 சதவிகித பரிவர்த்தனை அளவு என்பது டிஜிட்டல் முறையிலேயே நடைபெறுகிறது.
மேலும் 90%க்கும் அதிகமான கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் டிஜிட்டல் முறையிலேயே வழங்கிவருகிறது. இந்த நிலையில் இதன் டிஜிட்டல் அமைப்பில் தரவு பாதுகாப்பு மற்றும் தகவல் கசிவு தடுப்பு உத்திகள் இல்லை ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தங்களது தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications