சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஐடிபிஐ வங்கியில் பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், இவ்வங்கி பங்குகளை வாங்கப் பலர் முன்வந்தனர். வங்கி என்பதால் யார் அதிக தொகை கொடுக்கிறாரோ அவர்களுக்குக் கொடுக்க முடியாது, எனவே ஆர்பிஐ விருப்ப விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியானவர்களைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்குவதற்குக் கனடா நாட்டின் ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ், எமிரேட்ஸ் என்பிடி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு 45.48 சதவீத பங்குகளையும், லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா 49.24 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. இதில் 60.7 சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2022 ஆம் ஆண்டில் முதன் முதலாக அறிவிக்கப்பட்டது.
சுமார் 2 வருட ஆய்வுகள், பேச்சுவார்த்தை, நடைமுறை தீர்வுகளுக்குப் பின்பு ஆர்பிஐ மூன்று நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளது. ஆர்பிஐ-யின் 3 நிறுவன தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. நிதியமைச்சகம், ஆர்பிஐ, ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ், எமிரேட்ஸ் என்பிடி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை இது குறித்து எவ்விதமான கருத்தும் இதுவரையில் தெரிவிக்கவில்லை.
ஐடிபிஐ பங்குகளை வாங்குவதற்குத் தகுதியான நபர்களை ஆர்பிஐ தேர்வு செய்து ஒப்புதல் அளித்த உடனே, இந்த நிறுவனங்கள் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதன் பின்னர் ஐடிபிஐ வங்கியின் தனிப்பட்ட தரவுகளைத் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் பெற்று அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கும்.
கனடா நாட்டின் டோரொன்டோ-வை தலைமையிடமாகக் கொண்ட ஃபேர்ஃபாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனம், கனடா நாட்டு பில்லியனரும், இந்தியருமான பிரேம் வாட்சா முதலீட்டில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் பொது மற்றும் தனியார் பங்கு மற்றும் கடன் பத்திரத்தில் முதலீடு செய்கிறது.
எமிரேட்ஸ் என்பிடி குழுமம் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நிதி சேவைகளை வழங்குகிறது. கோட்டாக் மஹிந்திரா வங்கி இந்தியாவின் பிரபலமான தனியார் வங்கியாகும், தற்போது ஐடிபிஐ பங்குகளை வாங்குவது மூலம் தனது வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களைப் பெற முடியும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் வங்கியின் ஏலத்தை அரசு துவக்கக்கூடும் என்று கடந்த வாரம் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications