செப்டம்பர் காலாண்டில் பங்குச் சந்தையில் உயர்ந்த மதிப்பீடுகள் மற்றும் சில காரணங்களால், சுமார் 180 நிறுவனங்களின் உரிமையாளர்கள் சந்தையின் ஏற்றத்தை பயன்படுத்தி ரூ.40,000 கோடிக்கு மேல் பங்குகளை விற்றுள்ளனர். அவற்றில், இன்டர்குளோப் ஏவியேஷன், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் பதஞ்சலி ஃபுட்ஸ் ஆகியவற்றின் விற்பனைகள் அதிக அளவில் உள்ளன.
இன்றைய நிலவரப்படி, இரண்டாம் நிலை சந்தை வழியாக நிறுவனத்தின் உரிமையாளர்கள் விற்கப்பட்ட பங்குகளின் மதிப்பு ஏற்கனவே ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது 2023 ஆம் ஆண்டை விட 2 மடங்கு அதிகமாகும். அப்போதைய விற்பனை 48,000 கோடியாக இருந்தது. 2022 மற்றும் 2021 இல், இந்த எண்ணிக்கை முறையே ரூ.25,400 கோடி மற்றும் ரூ.54,500 கோடியாக இருந்தது.

பிஎஸ்இ, என்எஸ்இ தரவுகளின்படி, ஜூலை 1 முதல் ரூ.300 கோடி முதல் ரூ.10500 கோடி வரையிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இண்டர்குளோப் ஏவியேஷன், அம்புஜா சிமெண்ட்ஸ், பதஞ்சலி ஃபுட்ஸ், மேக்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ், கேபிஆர் மில்ஸ், ஈஸி மை டிரிப் பிளானர்ஸ், வெல்ஸ்பன் லைவிங், சியாண்ட் டிஎல்எம், சர்தா மோட்டர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சிக்னிட்டி டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள் விற்பனை செய்துள்ளனர்.
பல்வேறு காரணங்கள்
பொதுவாக நிறுவனத்தின் உரிமையாளர்கள் பங்கு ஏற்றத்தை ஒரு சரியான தருணமாகப் பார்க்கிறார்கள் எனவே, அந்த நேரத்தில் பங்கு சந்தையானது சிறப்பான லாபத்துடன் இருப்பதால், அவற்றை நிறுவனத்தின் உரிமையாளர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர். பங்குகளை லாபத்துடன் பணமாக்குவதற்கு இந்த நேரத்தை நல்ல நேரமாக பார்க்கிறார்கள், என்று ஆனந்த் ரதி வெல்த் துணை CEO ஃபெரோஸ் அஜீஸ் கூறினார்.
கடந்த மாதம், இன்டர்குளோப் ஏவியேஷன் உரிமையாளர் ராகேஷ் கங்வால் மற்றும் அவரது குடும்ப அறக்கட்டளை 5.83% பங்குகளை சுமார் ரூ.10,500 கோடிக்கு விற்றது. அதேபோல், ஆகஸ்டில், அதானி குழும நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸின் சுமார் 2.8% பங்குகளை ரூ.4,200 கோடிக்கு விற்றது.
இந்த மாதம், பதஞ்சலி ஃபுட்ஸின் உரிமையாளர்கள் 10.8 மில்லியன் பங்குகளை ரூ.2,016 கோடிக்கு விற்றுள்ளனர். மேக்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் அதன் கடனை அடைப்பதற்காக 3.19% பங்குகளை ரூ.1,218 கோடிக்கு விற்றது. வெல்ஸ்பன் லிவிங்கின் உரிமையாளர் திறந்த சந்தை பரிவர்த்தனை மூலம் 49.8 மில்லியன் பங்குகளை ரூ.1,035 கோடிக்கு விற்றார்.
மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த கேபிஆர் மில்லின் உரிமையாளரான கேபி ராமசாமி, ரூ.971.4 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார். அதே நேரத்தில் ஈஸி மை டிரிப் பிளானர் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ நிஷாந்த் பிட்டி 24.65 கோடி பங்குகளை பிளாக் ஒப்பந்தங்கள் மூலம் ரூ.920 கோடிக்கு புதன்கிழமை விற்றார்.
பட்டியலிடுதல் விதிமுறைகள், கடன் குறைப்பு மற்றும் நிறுவனத்தில் புதிய முதலீடுகளுக்காக இந்த விற்பனைகள் நடைபெற்றிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், மதிப்பீடுகள் உயரும் போது, முதன்மை அல்லது இரண்டாம் நிலை சந்தையில் இருந்து நிறுவன உரிமையாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் பங்குகளின் ஒரு பகுதியை விற்பார்கள் என்றும், அவர்கள் வணிகங்களை பல்வகைப்படுத்துதல், குடும்ப உறுப்பினர்களை சேர்த்தல், நன்கொடை செய்வதில் ஈடுபடுதல் போன்றவை இருக்கக்கூடும் என்று ரஜத் ராஜ்கார்ஹியா கூறினார்.
இதற்கிடையில், சமீப காலமாக இந்திய சந்தைகள் உலகளாவிலான சந்தைகளை விட சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.இந்த ஆண்டு இதுவரை MSCI குறியீடு 26% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் MSCI வளர்ந்து வரும் சந்தை மற்றும் MSCI உலக குறியீடுகள் முறையே 11% மற்றும் 17% உயர்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications