எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஓலா எலக்ட்ரிக், IPO வெளியிடும் திட்டத்தை நோக்கிப் பயணித்து வரும் வேளையில், இந்நிறுவனத்தின் இயக்குநர் பவிஷ் அகர்வால், இயக்க செலவுகளைக் குறைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
ஓலா குழுமத்தில் இருந்து அடுத்தடுத்து ஊழியர்கள் ராஜினாமா செய்து வரும் வேளையில், ஓலா எலக்ட்ரிக் செலவுகளை குறைக்கும் மாபெரும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதன் அடிப்படையில் வரும் வாரங்களில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து சுமார் 400-500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டத்தைக் கையில் எடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும், ஓலா எலக்ட்ரிக் தனது மொத்த உற்பத்தி தளத்தையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் வைத்துள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் ஓலா எலக்ட்ரிக் விரைவில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்கிடையில் பேட்டரி, உதிரிப்பாகங்கள் என தொழிற்சாலைகளைக் கிருஷ்ணகிரியில் அமைத்து வருகிறது ஓலா எலக்ட்ரிக். இந்த முக்கியமான கட்டத்தில் ஓலா எலக்ட்ரிக்-ன் தலைமை நிர்வாக குழு, பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கையை முடிவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பல்வேறு துறைகளிலிருந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும், இறுதி எண்ணிக்கை மாற்றமடையலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளையில் தற்போது பணிநீக்கம் செய்யும் இடத்தில் குறைந்த செலவில் புதிய பணியாளர்களை பணிக்கு எடுக்கவும், அதிக ஊழியர்களை தேர்வு செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடலாக இருப்பது எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், டிசம்பரில் இந்நிறுவனம் ஐபிஓ ஆவணங்களைத் தாக்கல் செய்யும் போது, அதில் அக்டோபர் 2023 நிலவரப்படி 3,733 ஊழியர்களைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தது. 2023ஆம் நிதியாண்டில் அதன் ஊழியர்களின் அட்ரிஷன் விகிதம் 47.48% ஆக இருந்தது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஓலா எலக்ட்ரிக்-ன் ஐபிஓ அறிக்கை தற்போது சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி-யிடம் நிலுவையில் உள்ளது. இந்த ஐபிஓ மூலம் ரூ.5,500 கோடி திரட்ட ஓலா எலக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஓலா குழுமத்தின் டாக்சி சேவை நிறுவனமான ஓலா கேப்ஸ் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஓலா கேப்ஸின் தலைமை நிர்வாகி ஹேமந்த் பக்ஷி மற்றும் தலைமை நிதி அதிகாரி கார்த்திக் குப்தா ஆகியோரும் இரண்டு வார இடைவெளியில் நிறுவனத்தை விட்டு அடுத்தடுத்து வெளியேறினர்.


Click it and Unblock the Notifications