இந்திய எலக்ட்ரிக் வாகனத் துறையில் முன்னோடியாக இருக்கும் ஓலா எலக்ட்ரிக் பல பிரச்சனைகளை தனது வாடிக்கையாளரிடம் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தரம் சார்ந்து எழுந்தாலும் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் துவங்கி, தனது தயாரிப்பு பொருட்களை உள்ளூர் மயமாக்கல் செய்வது வரையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த முயற்சிகளில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது ஸ்கூட்டர்களில் பயன்படுத்தும் பேட்டரிகளை தற்போது சீனாவில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் வாங்கி வரும் வேளையில், இதை சொந்தமாக இந்தியாவிலேயே அதுவும் தமிழ்நாட்டில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி லித்தியம்-அயன் செல் உற்பத்தி திறனை கொண்டு வர ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமான ஓலா செல் டெக்னாலஜீஸ் ப்ரைவேட் லிமிடெட் (OCTPL), தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் உள்ள போச்சம்பள்ளி சிப்காட் உள்ள தனது தொழிற்சாலையில் ரூ.2,200 கோடி முதலீடு செய்ய உள்ளது.
ஓலா செல் டெக்னாலஜீஸ் தயாரிக்கும் பேட்டரியை ஓலா தனது பைக்குகளுக்கு மட்டும் அல்லாமல் அடுத்தாக திட்டமிட்டு உள்ள எலக்ட்ரிக் கார் போன்றவற்றுக்கும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதோடு இந்த பேட்டரியை உள்நாட்டில் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யும் திட்டம் உள்ளது. இதன் மூலம் ஓலா செல் டெக்னாலஜீஸ் பெரும் வர்த்தக பிரிவாக மாறும் சக்தி கொண்டது என தெளிவாக தெரிகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் புதிய வளர்ச்சி இன்ஜினாகவும், வேலைவாய்ப்பு உருவாக்கும் இன்ஜினாகவும் ஓலா எலக்ட்ரிக் சாம்ராஜ்ஜியமாக உள்ளது. ஏற்கனவே கிருஷ்ணகிரிக்கு ஓசூர் என்ற மாபெரும் சக்தி இருந்தாலும், ஓலா மூலம் போச்சம்பள்ளி சிப்காட் பகுதி பெரும் பலத்தை பெறுகிறது. இத்தொழிற்சாலையில் அதிகப்படியான பெண்கள் பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
செப்டம்பர் 2024 நிலவரப்படி, ஓலா செல் டெக்னாலஜீஸ் ஏற்கனவே செல் உற்பத்தி தளம் அமைக்கும் திட்டத்தில் சுமார் ரூ. 1,200 கோடி முதலீடு செய்து, 1.4-GWh லித்தியம்-அயன் செல் உற்பத்தி திறனை நிறுவியுள்ளது. இந்த வசதியில் உற்பத்தி செய்யப்படும் செல்கள் BIS சான்றிதழை பெற்றுள்ளன மற்றும் தற்போது ஓலாவின் எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்த ஒப்புதல் செயல்முறையில் உள்ளன.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் தனது இரு சக்கர வாகன மாடல்களில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட செல்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன் பிறகு உற்பத்தி அதிகரிக்கும்.
எலக்ட்ரிக் வாகன சந்தையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்த, OCTPL தனது உற்பத்தி திறனை 1.4 GWH-ல் இருந்து 5 GWh ஆக அதிகரிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது, இதற்காகவே தற்போது 2200 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டம் வகுத்துள்ளது. மேலும் நிறுவனத்தின் நீண்ட கால பார்வை எதிர்கால கட்டங்களில் உற்பத்தியை 20 GWh ஆக அதிகரிப்பதாகும்.
இந்த திட்டத்திற்கான நிதியை ஓலா செல் டெக்னாலஜீஸ் நடப்பு நிதியாண்டில் ரூ. 2,200 கோடி மூலதன செலவினத்தை ஒதுக்கியுள்ளது. இந்த முதலீட்டை கடன் மற்றும் பங்கு மூலதனம், மற்றும் தாய் நிறுவனத்தின் IPO-வில் திரட்டப்பட்ட நிதி ஆகியவற்றை பயன்படுத்தி முதலீடு செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications