கூடங்குளம்: தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணு மின் நிலையம் மின்சார உற்பத்தியில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டமைப்பில் செயல்படுத்தி வரக்கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 10,000 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது முதல் தற்போது வரை 10,000 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது ஒரு மைல் கல் என்றும் பெருமிதம் கூறியுள்ளது. இது தொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஜாய் வர்கீஸ் வெளியிட்ட செய்தியில், கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்பத்துடன் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் முதல் அணு உலை மூலமாக 57,030 மில்லியன் யூனிட் மின்சாரமும் இரண்டாவது அணுவலை மூலமாக 42 , 993 மில்லியன் யூனிட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது அணுமின் நிலைய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல் எனக் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு அணு உலைகள் கிட்டத்தட்ட பத்து ஆண்டு காலமாக செயல்பட்டு வருகின்றன. மேற்கொண்டு நான்கு அணு உலைகளை கட்டமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதனிடையே ரஷ்ய அணு சக்தி முகமையான ரோசாட்டம் கூடங்குளத்தில் உள்ள அணு உலைகள் மதிப்பிடப்பட்டதை விட மிகவும் திறமையாக செயல்பட்டு வருகின்றன எனக் கூறியுள்ளது.
கூடங்குளத்தில் செயல்பாட்டில் உள்ள இரண்டு அணு உலைகள் மூலம் ஆண்டுக்கு 16 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு தடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் சுமார் 50 மில்லியன் குடும்பங்களுக்கு தேவையான மின்சாரத்தை கூடங்குளம் அணு மின் நிலையம் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படக்கூடிய மின்சாரமானது தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. ரஷ்யா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தை கட்டமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
அந்த வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு கூடங்குளம் அணுஉலையின் முதலாவது அணு உலை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. இரண்டாவது அணு உலை 2016ஆம் ஆண்டில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. இரண்டு உலைகளிலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பு வழியாக தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications