இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் குமார் மங்கலம் பிர்லா கட்டுப்பாட்டில் இருக்கும் ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் காப்பீட்டு தரகு பிரிவை மட்டும் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது
ஆதித்யா பிர்லா குழுமம் இந்தியாவின் பிற நிறுவனங்களைப் போலவே தனது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் பணியில் இறங்கியுள்ளது. குறிப்பாக அதன் டெலிகாம் சேவை பிரிவான வோடபோன் ஐடியா-வில் பங்கு முதலீடு செய்ய வேண்டி கட்டாயத்தில் இருக்கும் போது முக்கிய முடிவை எடுத்துள்ளது.
ஆதித்யா பிர்லா குழுமம் அதன் நிதிச் சேவை வணிகத்தை மறுசீரமைக்கத் திட்டமிட்டு உள்ள நிலையில் ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் ப்ரோகரேஜ் பிரிவை மட்டும் விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளது.
ஆதித்யா பிர்லா இன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ்
ஆதித்யா பிர்லா இன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் லிமிடெட் துவங்கப்பட்டு 19 ஆண்டு ஆன நிலையிலும் இப்பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில், நிதி நெருக்கடி நிறைந்த காலகட்டத்தில் இப்பிரிவை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
ஆதித்யா பிர்லா கேபிடல்
Aditya Birla Insurance Brokers நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான ஆதித்யா பிர்லா கேபிடல் பங்குச்சந்தையில் உள்ளது. இந்த நிலையில் இன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் பிரிவை மட்டும் விற்பனை செய்ய இதை வாங்க கூடிய தகுதியானவர்களிடம் ஆதித்யா பிர்லா கேபிடல் பேச்சுவார்த்தை நடத்த துவங்கியுள்ளது.
கூட்டுக் காப்பீட்டு நிறுவனம்
இது இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும், அதாவது லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஆயுள் காப்பீடு அல்லாத பாலிசிகள் இரண்டையும் வழங்கும் அமைப்பாகும். இந்தியாவில் சுமார் 11 இடங்களில் அலுவலகங்கள் உடன் சுமார் 350க்கும் அதிகமான ஊழியர்களைப் பணியில் வைத்துள்ளது.
மார்ச் 31
ஆதித்யா பிர்லா இன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் லிமிடெட் மார்ச் 31, 2021 உடன் முடிவடைந்த நிதியாண்டில் வெறும் 595 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை மட்டுமே பெற்றுள்ளது. இதேபோல் 4852 கோடி ரூபாய் அளவிலான ப்ரீமியம் தொகையை மட்டுமே பெற்றுள்ளது.
600 கோடி ரூபாய் வருவாய்
இத்துறையில் இருக்கும் சக நிறுவனங்களை ஒப்பிடுகையில் 600 கோடி ரூபாய் வருவாய் என்பது குறைவு தான். இந்த நிலையில் சொத்து மேலாண்மை முதல் அடமான நிதி வரையிலான சேவைகளைக் கொண்டு இருக்கும் ஆதித்ய பிர்லா கேபிடல் நிறுவனத்தின் வணிகங்களை மறுசீரமைப்புச் செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
விசாகா முலி
இந்த நிலையில் ஆதித்ய பிர்லா கேபிடல் தலைமை செயல் அதிகாரி விசாகா முலி -யின் தலைமையில் இந்த விற்பனை மூலம் பங்குதாரர்களின் வருமானத்தையும் மதிப்பீட்டையும் அதிகரிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
பங்கு மதிப்பு
ஆதித்ய பிர்லா கேபிடல் நிறுவனத்தின் பங்குகள் 2017 இன் அறிமுக விலைக்கு மேல் இதுவரையில் வர்த்தகம் செய்யவில்லை என்றாலும், ஜூன் மாதத்தில் விசாகா முலி-யின் தலைமை பதவி பெற்ற பின்பு சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
வோடபோன் ஐடியா
இதற்கிடையில் டெலிகாம் சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா நிறுவனத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க அதன் தாய் நிறுவனமான பிரிட்டன் வோடபோன் மற்றும் இந்திய நிறுவனமான ஆதித்யா பிர்லா குரூப் ஜனவரி - பிப்ரவரி மாதத்திற்குள் பங்கு முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில் கடுமையான நிதியியல் முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications