இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்று ஆதித்யா பிர்லா குழுமம். இந்த குழுமத்திற்கு உட்பட்ட நிறுவனங்களில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வாரிய இயக்குனர்களாக குமார மங்களம் பிர்லாவின் மகன் மற்றும் மகள் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவன வாரிய இயக்குனர்களாக அனன்யா பிர்லா மற்றும் ஆரியமான் விக்ரம் பிர்லா ஆகியோரை நியமிக்க வாரிய குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய இயக்குனர்களின் வரவு மூலம் நவீன தொழில் உத்திகள் நிறுவனத்திற்குள் கொண்டு வரப்படும் என நம்புவதாக ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹிண்டால்கோ நிறுவனம் குறைந்த கார்பன் வெளியிட்டை கொண்ட நிறுவனமாக மாறுவதற்கு முயற்சி செய்து வரும் நிலையில் அனன்யா மற்றும் ஆரியமான் ஆகிய இருவரின் வருகை அதற்கு வித்திடும் என நம்புவதாக ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார மங்களம் பிர்லா தெரிவித்துள்ளார்.
அனன்யா பிர்லா மற்றும் ஆரியமான் பிர்லா இருவரும் பிர்லா குழுமத்தின் பிரதான நிறுவனமான கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆதித்யா பிர்லா பேஷன் அண்ட் ரீடைல் ஆகிய நிறுவனங்களின் வாரிய குழு உறுப்பினர்களாக 2023ஆம் ஆண்டிலேயே இணைந்தனர். இவ்விரு நிறுவன பணிகளையும் அவர்கள் மேற்பார்வையிட்டனர். இதனை அடுத்து இருவரும் ஆதித்யா பிர்லா மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் குழு உறுப்பினர்களாகவும் சேர்க்கப்பட்டனர்.
தற்போதைய சூழலில் இவர்கள் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலும் இயக்குனர்களாக இணைந்துள்ளனர். ஆதித்யா பிர்லா குழுமம் புதிதாக பெயிண்ட், பிராண்டட் நகை வியாபாரம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. எனவே இளம் வாரிசுகளின் வருகை நிறுவன வளர்ச்சியை மேம்படுத்தும் என ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைமை நம்புகிறது.
முன்னதாக அஞ்சனி குமார் அக்ரவால் மற்றும் சுகன்யா கிரிபாலு ஆகிய இருவரும் சுயாதீன இயக்குனர்களாக நியமிக்கப்படுகின்றனர் என ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. இதனிடையே பாரத் கோயன்கா சிறப்பு நிதி அதிகாரியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு பாரத் கோயன்கா மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
ஆதித்யா பிர்லா குழுமத்தை பொறுத்தவரை ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 3 ,074 கோடி ரூபாய் என 25 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 7.75 சதவீதம் அதிகரித்து 57 ,013 கோடி ரூபாயாக உயர்ந்தது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications