நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு அதிகரித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இப்படி இருக்கையில் இந்த விஷயத்தை ஆதரிக்கும் ஒரு கருத்தை ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார். பலருக்கும் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்றைய உலகில் ரூ.1 கோடி ரூபாய் முதலீடு செய்தாலும் போதாது என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லா கருத்துப்படி, இன்றைய சூழலில் எந்த ஒரு தொழிலையும் ரூ. 1 கோடி ரூபாயில் தொடங்க முடியாது என்று கூறியுள்ளார். நிகில் காமத்தின் பாட்காஸ்ட் ஷோவில் பங்கேற்ற குமார் மங்கலம் பிர்லா தனது தலைமையத்துவ பாணி, வணிக தத்துவம் மற்றும் தனிப்பட்ட பயணம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

தலைமைத்துவம்: குமார் மங்கலம் பிர்லா தனது தலைமைத்துவத்திற்கு அடிப்படையாக 2 விஷயங்களைப் பின்பற்றுகிறார். ஒன்று ஒழுக்கம் மற்றொன்று நம்பிக்கை. ஆதித்ய பிர்லா குழுமத்தில் தற்போது 1,80,000 பேரை நிர்வகிக்கும் பொறுப்பில் இவர் இருக்கிறார். கடந்த 29 ஆண்டுகளில் வெறும் 18 முறை மட்டுமே கோபப்பட்டதாகவும், இது ஒரு மேனேஜ்மென்ட் பிரின்ஸ்பல் என்றும் தெரிவித்தார். கார்ப்பரேட் சூழலில் கோபத்தை வெளிப்படுத்துவது என்பது கட்டுப்பாட்டை இழப்பதற்கு சமம் என்று தெரிவித்தார்.
மேனேஜ்மென்ட்: தனது மேனேஜ்மென்ட் பாலிசி குறித்து பேசிய குமார் மங்கலம் பிர்லா எந்த ஒரு சந்தையில் தான் நுழைந்தாலும் அதில் முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தை பிடிக்கும் வகையில் செயல்படுவதாகவும், பெரிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியம் என்று கருதுவதாகவும் தெரிவித்தார். எளிமையாக கிடைக்கும் வெற்றிகள் தற்போது குறைந்து வருவதால் புதுமையான யோசனைகள் தேவைப்படுகின்றன. எனவே வணிகத்தை உருவாக்குவது மற்றும் வழி நடத்துவது அனைத்தும் ஒரு வகையான கலை என்று கூறியுள்ளார்.
ஸ்டார்ட் அப்: ஸ்டார்ட் அப் பற்றி பேசிய பிர்லா முதலீட்டு தேவைகள் குறித்த ஆலோசனையையும் வழங்கினார். இன்றைய சூழலில் எந்த ஒரு தொழிலை தொடங்குவதற்கும் ரூ.1 கோடி மட்டும் போதாது என்றும் கூறியுள்ளார். அதோடு எந்த ஒரு வணிகமானாலும் அதை வெற்றிகரமாக வழி நடத்துவதற்கு நம்பிக்கை தேவை என்றும் பகிர்ந்து கொண்டார்.
ஆரம்ப கால வாழ்க்கை: குமார் மங்கலம் பிர்லா தனது தந்தையுடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியதில் இருந்தே தனது தொழில்முனைவோர் பயணம் தொடங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஏனெனில் அவர் 18 வயதாக இருக்கும்போது தனது தந்தையுடன் சேர்ந்து கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். அதன் பிறகு தனது தந்தை அகால மரணம் அடைந்ததை தொடர்ந்து 28 வயதிலேயே ஆதித்ய பிர்லா குழுமத்தின் பொறுப்பை முழுமையாக எடுத்துக் கொண்டதாகவும் தனது ஆரம்ப நாட்கள் குறித்து நினைவு கூர்ந்தார்.


Click it and Unblock the Notifications