சிங்கப்பூர், மலேசியாவிற்கு அடுத்தபடியாக இந்தியர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் பட்டியலில் வளைகுடா நாடுகள் உள்ளது. அதிலும் தென் மாநிலங்களில் இருந்து வேலைக்காவும், வர்த்தகத்திற்காகவும் வளைகுடா நாடுகளில் செல்லும் மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
இந்நிலையில் குவைத் நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீத மக்கள் வெளிநாட்டினர் என்பதால் இதைக் குறைக்க வேண்டும் எனச் சில மாதங்களுக்கு முன் முடிவு செய்தார் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா.
இதன் படி குவைத் அரசு உருவாக்கிய வெளிநாட்டினரை வெளியேற்றம் செய்யப்படும் மசோகா குவைத் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றது. இதனால் இந்தியர்கள் மிகப்பெரிய அச்சத்தில் உள்ளனர்.
இந்தியர்கள்
குவைத் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற மசோதாவின் படி குவைத் நாட்டில் இருக்கும் இந்திய மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதம் தாண்டக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குவைத் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்து இந்த மசோதாவை அமலாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
8 லட்சம் பேர்
தற்போது குவைத் நாட்டில் இருக்கும் 43 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 30 லட்சம் பேர் வெளிநாட்டினர், இதில் 14.5 லட்சம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டதிட்டத்தின் படி மொத்த மக்கள் தொகையில் இந்திய மக்கள் தொகை 15 சதவீதம் தாண்டக் கூடாது என்பதால் தற்போது இருக்கும் 14.5 லட்சம் இந்தியர்களில் சுமார் 7 முதல் 8 லட்சம் பேர் குவைத் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.
எகிப்து
இதேபோல் இந்தியர்களுக்கு அடுத்தாகக் குவைத் நாட்டில் அதிகமாக இருக்கும் மக்கள் எகிப்து நாட்டு மக்கள். இவர்களின் எண்ணிக்கையும் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள குவைத் அரசு, மொத்த மக்கள் தொகையில் எகிப்து மக்கள் தொகை 10 சதவீதம் தான் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வருவாய்
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பணத்தில் குவைத் முக்கிய இடத்தில் உள்ளது. 2018இல் குவைத் நாட்டில் இருந்து மட்டும் 4.8 பில்லியன் டாலர் அளவிலான தொகை இந்தியாவிற்கு வந்துள்ளது.
தற்போது அமலாக்கம் செய்யப்படும் மசோதா மூலம் இந்தத் தொகையும் குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
சிறுபான்மையினர்
சொந்த நாட்டிலேயே குவைத் மக்கள் சிறுபான்மையினராக இருக்கும் காரணத்தால், இதனை எதிர்வினைகள் மற்றும் குவைத் நாட்டின் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மசோதா அமலாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது குவைத் அரசு.
70 சதவீதம் வெளிநாட்டினர்
கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு குவைத் நாட்டில் வெளிநாட்டினர் எண்ணிக்கையை வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 70 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனக் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா முடிவு செய்தார்.
பட்ஜெட்
மேலும் கொரோனா பாதிப்பு மற்றும் மோசமான கச்சா எண்ணெய் வர்த்தகம் வாயிலாக 2020-21ஆம் நிதியாண்டில் குவைத் கிட்டத்தட்ட ஜிடிபி-யில் 45 சதவீத நிதிப் பற்றாக்குறை சந்திக்கும் அளவிற்கு மோசமாக உள்ளதாகக் குவைத் தேசிய வங்கி அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications