கோடக் மஹிந்திரா வங்கியின் இணை நிர்வாக இயக்குனராக இருந்த KVS மணியன், நேற்று மாலை பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் படி இன்று முதல் தனது பதவியில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்தார்.
இந்த செய்தி இன்று காலை கோடக் மஹிந்திரா வங்கி ஊழியர்களையும், இவ்வங்கி முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இப்போது KVS மணியன் ஃபெடரல் வங்கியில் சேர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிருஷ்ணன் வெங்கட் சுப்ரமணியன் (KVS மணியன்) முழு நேர இயக்குநர், இணை நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து விலகுகிறார், அவர் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்ததை தொடர்ந்து அதை வங்கி நிர்வாகம் ஏற்றுக்கொடுள்ளது.
இதை தொடர்ந்து கோடக் மஹிந்திரா வங்கி பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில், வங்கியின் இணை நிர்வாக இயக்குநராக இருக்கும் கே.வி.எஸ்.மணியன், ஏப்ரல் 30 அன்று வங்கியிலிருந்தும், பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாகவும், இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேவிஎஸ் மணியன் அவர்கள் கோடக் மஹிந்திரா வங்கி நிர்வாகத்துக்கு சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தில், "நிதிச் சேவை துறையில் பிற வாய்ப்புகளைத் தொடர்வதற்காக கோடக் மஹிந்திரா வங்கியில் எனது பதவிகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன். இதன் விளைவாக, நான் நிர்வாக குழுவிலிருந்தும் விலகுகிறேன்." என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியாகி 24 மணிநேரத்திற்குள் ஃபெடரல் வங்கியில் சேர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடக் மஹிந்திரா வங்கியில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் KVS மணியன். இவ்வங்கியில் ஜனவரி மாதம் நடந்த நிர்வாக மறுசீரமைப்பில் பதவி உயர்வு பெற்று அசத்திய வேளையில் ஆர்பிஐ நடவடிக்கைக்குப் பின்பு தற்போது இவருடைய ராஜினாமா செய்தி வந்துள்ளது.


Click it and Unblock the Notifications