பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்ட் டி (L&T) நிறுவனத்தின் தலைவரான எஸ்.என்.சுப்ரமணியனின் சம்பளம் கடந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் அவரது சம்பளம் ரூ.51.05 கோடியாக இருந்தது. இது 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.76.25 கோடியாக அதிகரித்துள்ளது. எஸ்.என்.சுப்ரமணியன் பங்கு விருப்பங்களைப் பயன்படுத்தியதால் இந்த சம்பள உயர்வு ஏற்பட்டுள்ளது.
அதாவது, நிறுவனத்தின் பங்குகளை பங்குதாரர் போல் குறைந்த விலையில் வாங்கும் உரிமை தான் பங்கு விருப்பங்கள். ஒரு நிறுவனம் வளர்ந்து, பங்குகளின் விலை உயர்ந்தால், குறைந்த விலையில் அந்நிறுவனத்தின் ஊழியர் பங்குகளை வாங்கி, அதனை விற்று சம்பாதிக்கலாம். இதனால், ஊழியர்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பும், அவர்களை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.

L&T நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில், கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் எஸ்.என்.சுப்ரமணியன் ஊழியர் பங்கு விருப்பத் திட்டத்தை (ESOP) பயன்படுத்தியதாகவும், அதன் மதிப்பு ரூ.15.88 கோடி என்றும் தெரிவித்துள்ளது. 2023-24இல் இது பூஜ்ஜியமாக இருந்ததால் தான், தற்போது இவரது சம்பளத்தில் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
அதே சமயம், L&T நிறுவனத்தின் மற்ற அதிகாரிகளின் சம்பளமும் உயர்ந்துள்ளது. முழுநேர இயக்குநரும் தலைமை நிதி அதிகாரியுமான (CFO) ஆர். சங்கர் ராமன், 2025ஆம் நிதியாண்டில் ரூ.37.33 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநரும் தலைவருமான சுப்பிரமணியம் சர்மா ரூ.44.55 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
90 மணி நேரம் வேலை : கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில காலத்திற்கு முன்பு, L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன், ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் எனவும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்ற வேண்டும் என கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, விவாதத்தை தூண்டியது.
பொதுவாக வேலையை நாம் புனிதப்படுத்தி வைத்துள்ளோம். உழைப்பு எவ்வளவு முக்கியமோ ஓய்வும் அவ்வளவு முக்கியம். மனதிற்கு பிடித்த வேலை என்றால் சிலர், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்வார்கள். வேலையை வேலையாக மட்டும் ஒருவர் ஒரு நிறுவனத்தில் பார்க்கும்போது, சுதந்திரம், செய்யும் வேலையில் திறமை மற்றும் அதன் நோக்கம் ஆகிய 3 விஷயங்களையுமே நிறுவனங்கள் பார்க்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் 45 வயதுக்குள்ளாகவே மனிதர்களுக்கு ஏராளமான உடல் சார்ந்த பாதிப்புகள் வரத் தொடங்கிவிட்டன. மேலும், அனைவருக்கும் குடும்பம் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே, ஆக, உடல் மற்றும் மனநலம், குடும்பங்களை பார்த்துகொள்வது, ஓய்வு உள்ளிட்ட காரணங்களால், 90 மணி நேர வேலை என்பது சாத்தியப்படாது. இது நடைமுறைக்கும் ஒத்துவராது" என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications