சர்வதேச அளவில் அதிக தேவை உள்ள ஒரு தொழிலாக செமிகண்டக்டர் துறை வளர்ந்து வருகிறது. எனவே உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இந்த துறையில் கால்பதித்து வருகின்றன.
நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, ஸ்மார்ட் கருவிகளின் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவற்றை இதற்கு காரணமாக கூறலாம். இந்தியா செமிகண்டக்டர் பிரிவில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு பல்வேறு நிறுவனங்களும் இந்த பிரிவில் முதலீடு செய்வதற்கும் தொழில் தொடங்குவதற்கும் ஊக்குவித்து வருகிறது.

அந்த வகையில் செமிகான் இந்தியா 2024 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எல்&டி நிறுவனத்தின் செமிகண்டக்டர் டெக்னாலஜிஸ் நிறுவனம், ஐபிஎம் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி அட்வாஸ்டு பிராசஸர்களை வடிவமைப்பு செய்வதில் எல் &டி செமிகண்டக்டர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனமும், ஐபிஎம் நிறுவனமும் இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கருவிகள் மற்றும் ஹைபிரிட் கிளவுட் அமைப்புகள் மற்றும் வாகனங்கள், உற்பத்தி துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான பிராசஸர்களை நவீன தொழில்நுட்ப முறையில் வடிவமைத்து தருவதில் இரண்டு நிறுவனங்களும் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் செமிகண்டக்டர் தொழில்துறையில் இது ஒரு பொன்னான காலம் என எல்&டி செமிகண்டக்டர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சந்திப் குமார் தெரிவித்துள்ளார். செமிகண்டக்டர்கள் பல்வேறு நிறுவனங்களின் பழமையான கட்டமைப்புகளையும் மாற்றி வருகின்றன எனக் கூறியுள்ளார்.
தற்போது ஐபிஎம் நிறுவனமும் எல்&டி நிறுவனமும் இணைந்து செய்துள்ள இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் நாட்டின் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு ஏற்ற வகையில் அடுத்த தலைமுறையினருக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் வகையிலான பிராசஸர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம் எனக் கூறியுள்ளார்.
ஐபிஎம் செமிகண்டக்டர் நிறுவனத்தின் பொது மேலாளர், முகேஷ் இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றத்தில் ஐபிஎம் நிறுவனம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்க விரும்புவதாக கூறினார். எல்&டி நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய ஒப்பந்தம் மூலம் நவீன செயற்கை நுண்ணறிவு பிராசஸர் வடிவமைப்பு மற்றும் புது கண்டுபிடிப்புகளில் இந்தியாவை உலக சந்தையில் முன்னணியில் கொண்டு வருவதே ஆகியவையே தங்களின் இலக்கு என தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications