எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ் என் சுப்ரமணியன் ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என கூறி இருப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரெடிட் தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில் எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ் என் சுப்ரமணியன் ஊழியர்களிடம் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ எந்த ஆண்டில் அல்லது எந்த தேதியில் எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இல்லை. வீடியோவில் சுப்ரமணியன், ஊழியர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிப்பதாக அமைந்துள்ளது.

ஊழியர் ஒருவர் சனிக்கிழமைகளிலும் வேலை செய்வதை நிறுவனம் ஏன் கட்டாயப்படுத்துகிறது என கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதில் அளிக்கும் சுப்ரமணியன் உண்மையாக கூற வேண்டும் என்றால் உங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய வைக்க முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது.
உங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய வைத்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் நானும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வீட்டில் அமர்ந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் எவ்வளவு நேரம் தான் நீங்கள் உங்கள் மனைவியையோ அல்லது கணவனையோ பார்த்துக் கொண்டிருக்க போறீர்கள் அதற்கு பதிலாக வேலை செய்யலாமே என தெரிவிக்கிறார்.
மேலும் தன்னுடைய கூற்றை நியாயப்படுத்தும் வகையில் சீனாவை சேர்ந்த தொழில் நிபுணர் தெரிவித்த கருத்தை சுப்ரமணியன் கூறுகிறார். அமெரிக்க பொருளாதாரத்தை விட சீன பொருளாதாரம் வளர்ந்து விடும் ஏனெனில் சீனர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்கின்றனர் அமெரிக்காவில் 50 மணி நேரம் மட்டுமே உழைக்கின்றனர் என கூறியதாக அவர் தெரிவிக்கிறார்.
உலகில் முன்னணி இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் நீங்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும் என சுப்ரமணியன் தெரிவிக்கிறார். இந்த வீடியோ ரெடிட் தளத்தில் பகிரப்பட்டு பலரது விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. இது ஒரு கார்ப்பரேட் அடிமைத்தனம் என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
ஒரு பயனர் நிறுவன முதலாளி உங்களுடைய சம்பளம் என்ன? என்னுடைய சம்பளம் என்ன? நீங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை செய்யலாம் குறைந்த சம்பளம் வாங்க கூடிய நான் ஏன் வேலை செய்ய வேண்டும் ? என வினவியுள்ளார்.
ஒரு பயனர் எல்&டி நிறுவனம் ஊழியர்களுக்கு தகுந்த ஊதியத்தை வழங்குவதில்லை என தெரிவித்திருக்கிறார். தற்போது நாடு முழுவதும் வொர்க் லைஃப் பேலன்ஸ் குறித்து விழிப்புணர்வு அதிகமாகி வரக்கூடிய சூழலில் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவரே இவ்வாறு கூறி இருப்பது சரியல்ல என பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications