இந்திய ஆட்டோமொபைல் துறை யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளில் பல தொழிற்சாலைகள் வர உள்ளது, இந்த நிலையில் தமிழ்நாட்டுக்குப் போட்டியாகப் பிற மாநிலங்களும் ஆட்டோமொபைல் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் பெங்களூரில் புதிய ஆட்டோமொபைல் தொழிற்சாலை கட்டுவதற்கான மாபெரும் திட்டத்தைப் பிரபல கட்டுமான நிறுவனமான எல் & டி பெற்றுள்ளது.
பெங்களூரில் ஏற்கனவே பல ஆட்டோமொபைல் தொழிற்சாலை இருந்தாலும், தமிழ்நாட்டுடன் போட்டிப்போட முடியாத அளவில் தான் உள்ளது. பெங்களூர் பொறுத்தவரையில் மிகப்பெரிய கார் நிறுவனம் என்றால் அது டோயோட்டாவின் பிடாடி தொழிற்சாலை தான். இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரிக்கப் பெங்களூரில் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தில் இருந்த டோயோட்டா கிர்லோஸ்கார் மகாராஷ்டிராவில் புதிய தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இதேவேளையில் கர்நாடக மாநிலத்திற்கான ஜாக்பாட் ஆக மாறிய பாக்ஸ்கான் முதலீட்டு திட்டத்தில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைக்கான திட்டம் இருப்பதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வரும் வேளையில் எல் & டி எந்த நிறுவனத்திற்காகத் தொழிற்சாலை அமைக்கிறது என்ற விபரத்தை வெளியிடாமல் இத்தகவலை வெளியிட்டு உள்ளது.
எல் & டி நிறுவனம் தனது அறிக்கையில் லார்சென் & டுப்ரோவின் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பிரிவுக்கு ரூ.1,000 முதல் 2,500 கோடி வரையிலான புதிய ஒப்பந்தம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, பெங்களூரு அருகே ஒரு பிரபல நிறுவனத்திற்கு நவீன ஆட்டோமொபைல் தயாரிப்பு ஆலையைக் கட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலை பெங்களூரு அருகே கட்டப்பட உள்ளது. இதற்கான வடிவமைப்பு, சிவில், கட்டமைப்பு, கட்டிடக்கலை மற்றும் எம்இபிஎப் சேவைகளை வழங்க உள்ளோம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை ரூ.1,000 முதல் 2,500 கோடி வரையில் மதிப்பிடப்படும் வேளையில், இது கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பிரிவுக்கு முக்கியமான திட்டமாக லார்சென் & டுப்ரோ அறிவித்துள்ளது.
கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பிரிவு பல்வேறு துறைகளுக்கான அனைத்து வகையான EPC திட்டங்களையும் மேற்கொள்ளும் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளது. டாடா குழுமத்திலும் இதேபிரிவில் இயங்கக் கூடிய டாடா ப்ராஜெக்ட்ஸ் என்ற டிசைன் மற்றும் கட்டுமான நிறுவனம் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் எல் அண்ட் டி பங்குகள் 1 சதவீதம் குறைந்து ஒரு பங்கு விலை 3,776.85 ரூபாயாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 7 சதவீதமும், ஒரு வருடத்தில் 41.65 சதவீதமும் இந்நிறுவனப் பங்குகள் வளர்ச்சியில் உள்ளது.


Click it and Unblock the Notifications