மும்பை: வங்கி அல்லாத நிதி நிறுவனமான எல்&டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம், உரிமை பங்கு வெளியீடு மூலமாக நிதி திரட்ட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து இந்த நிறுவனம் சட்ட ஆலோசகர்கள் மற்றும் முதலீட்டு வங்கிகளுடன் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாக இதனை அறிந்தவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து வெளியான லைவ் மிண்ட் செய்தியில், முன்னதாக இவர்கள் ஒரு QIP பற்றியும் பரிசீலித்து வந்தனர்.

பொறியியல் சந்தையில் இருக்கும் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் அதன் நிதி பிரிவான, வங்கி சாரா கடன் வழங்குனரான எல் & டி பைனான்ஸ் மூலம் உரிமை பங்கு வெளியீட்டுக்கு திட்டமிட்டுள்ளது. எனினும் இதற்கான சரியான ஆட்களை இன்னும் இந்த நிறுவனம் நியமிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த உரிமை பங்கு வெளியீட்டின் மூலம் 2,000 கோடி ரூபாய் முதல் 3,000 கோடி ரூபாய் வரையில் நிதி திரட்ட எதிர்பார்ப்பதாகவும் இதனையறிந்த நபர்கள் கூறியுள்ளனர். எனினும் இது குறித்து எல் & டி எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை.
கொரோனாவில் ஆட்டம் கண்டுள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் பலவும் நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளதை, சமீப வாரங்களாக பார்க்க முடிகிறது. ஏனெனில் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கொரோனாவால் முடங்கியுள்ள நிலையில், தங்களது இருப்பு நிலையை உயர்த்திக் கொள்வதற்காக மூலதனத்தினை திரட்டி வருகின்றன. இது தொற்று நோயால் சரிந்து வரும் பொருளாதாரத்தினை தடுக்க பயன்படும் என்றும் நிபுணர்கள் மத்தியிலும், ஆர்பிஐ-யின் ஆளு நரும் ஒர் அறிக்கையில் கூறியிருந்தனர். இதற்கிடையில் தான் தற்போது பல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த மாதத்தில் மட்டும் தனியார் வங்கிகளான ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகியவையும் நிதிகளை திரட்டி வருகின்றன. மேற்கண்ட இந்த வங்கிகள் qualified institutional placement மூலம் சுமார் 39,000 கோடி ரூபாய் நிதியினை திரட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதே வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் மஹேந்திரா பைனான்ஸ், ஸ்ரீ ராம் பைனான்ஸ் நிறுவனங்கள் முறையே உரிமை பங்கு வெளியீடு மூலம் முறையே 3,089 கோடி ரூபாய் மற்றும் 1,500 கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ளன.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தனது நிகரலாபத்தில் 73% சரிவினைக் கண்ட இந்த நிறுவனம், வெறும் 148 கோடி ரூபாய் லாபத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் தற்போது உரிமை பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications