மும்பை: இந்தியாவின் பிரபல கட்டுமான மற்றும் இன்ஜினியரிங் துறை நிறுவனமான எல்&டி (L&T) நிறுவனம் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டிய ஆறாவது தனியார் நிறுவனம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.
எல்&டி (L&T) நிறுவனம் கடந்த மே 8ஆம் தேதி தங்களுடைய ஆண்டு வருவாய் தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. இதன்படி 2024 ஆம் நிதியாண்டில் எல்&டி நிறுவனத்தின் வருவாய் 2.21 லட்சம் கோடிகளாக இருக்கிறது.இது கடந்த நிதி ஆண்டை ஒப்பிடுகையில் 21% அதிகமாகும்.

இதன் மூலம் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டிய இந்தியாவின் ஆறாவது தனியார் நிறுவனம் என்ற பெயரை எல்&டி பெற்றுள்ளது. இந்த மைல்கல் மூலம் இந்த நிறுவனம் ஏற்கனவே இந்த எலைட் கிளப்பில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல், டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் மற்றும் ஹிண்டால்கோ ஆகியவற்றின் பட்டியலில் இணைந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை பொறுத்தவரை 2024ஆம் நிதியாண்டில் அதன் வருவாய் 9 லட்சம் கோடியாக உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவாய் 4.2 லட்சம் கோடி ரூபாயாகவும், டாட்டா ஸ்டீலின் வருவாய் 2.3 லட்சம் கோடியாகவும் இருக்கிறது.
எல்&டி நிறுவனத்திற்கு 2024 ஆம் நிதியாண்டில் வெளிநாடுகளில் மேற்கொண்ட திட்டப் பணிகள் மூலம் 43% வருவாய் அதாவது 95,086 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. பல்வேறு சர்வதேச திட்டப்பணிகளை முன்னெடுத்ததன் மூலம் இந்நிறுவனத்திற்கு பெரும் அளவிலான வருவாய் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
2024 ஆம் நிதியாண்டில் எல்&டி நிறுவனம் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி மதிப்பிலான ஆர்டர்களை பெற்றது. இதனால் இந்த நிறுவனத்தின் வருடாந்திர ரீதியிலான வளர்ச்சி 31% அதிகரித்துள்ளது. மெட்ரோ பணிகள், விமான நிலையம், சாலை மற்றும் பாலங்கள், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை பல துறை சார்ந்த திட்டங்களுக்கான ஆர்டர்களை எல்&டி பெற்றுள்ளது. இதில் சர்வதேச ஆர்டர்களின் மதிப்பு 1.63 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
2025 ஆம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி என்பது 15% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக இதன் தலைமை நிதி அதிகாரியான சங்கர் ராமன் கூறியுள்ளார். கடந்த ஓராண்டு காலத்தில் நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 47.2% அதிகரித்துள்ளது. மே 10ஆம் தேதி வெள்ளியன்று பங்குச்சந்தையில் இதன் ஒரு பங்கு 3,276 ரூபாய்க்கு வர்த்தகமானது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications