இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்து காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வரும் வேளையில், இந்தியாவின் மிட் சைஸ் ஐடி சேவை நிறுவனமான எல்&டி டெக் செவ்வாய்க்கிழமை தனது டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
டிசம்பர் காலாண்டில் எல்&டி டெக் நிறுவனம் சுமார் 336 கோடி ரூபாய் அளவிலான நிகர லாபம் பெற்றுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.297 கோடியுடன் ஒப்பிடுகையில் 13% அதிகமாகும்.

2023-24 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் எல்&டி டெக் நிறுவனம் தனது செயல்பாடுகளின் மூலம் பெறப்பட்ட வருவாய் அளவு வருடாந்திர அடிப்படையில் 12% உயர்ந்து ரூ.2,422 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.2,157 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 2024 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்டி அமித் சாதா-வை அதன் நிர்வாகக் குழு மீண்டும் நியமித்துள்ளது. இதன் மூலம் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு எல்&டி டெக் நிறுவனத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்தது.
டிசம்பர் காலாண்டில் எல்&டி டெக் நிறுவனம் 10 மில்லியன் டாலர் பிரிவில் 6 ஒப்பந்தங்களையும், 40 மில்லியன் டாலர் பிரிவில் 1 ஒப்பந்தத்தையும், 20 மில்லியன் டாலர் பிரிவில் 1 ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளது. இதன் மூலம் 2024 ஆம் நிதியாண்டில் எல்&டி டெக் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 17.5 சதவீதம் முதல் 18.5 சதவீதம் வரையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
டிசம்பர் காலாண்டு முடிவில் எல்&டி டெக் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 23,298 ஆக இருந்தது. எல் அண்ட் டி டெக் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 1.8 சதவீதம் சரிவுடன் 5,346 ரூபாய் அளவில் தேசிய பங்குச்சந்தையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இக்காலாண்டில் விப்ரோ நிறுவனம் 2,694 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இதேபோல் டிசம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 22,205 கோடி ரூபாயாக உள்ளது. டிசம்பர் காலாண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 4,473 பேர் குறைந்து 2,40,234 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
டிசம்பர் 31 ஆம் தேதி முடிவில் ரோஷினி நாடார் தலைமையிலான ஹெச்சிஎல் டெக் நிறுவனம் 4350 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது, இதேபோல் வருவாய் 28,446 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் ஹெச்சிஎல் நிறுவனத்தில் டிசம்பர் காலாண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,617 பேர் அதிகரித்து 2,24,756 ஆக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications