இந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனமான லார்சன் & டூப்ரோ (L&T) மத்திய கிழக்கில் உள்ள அதன் வாடிக்கையாளரிடமிருந்து 7,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. இதன் எதிரொலியாக வியாழக்கிழமை வர்த்தகத்தில் லார்சன் & டூப்ரோ பங்குகள் அதன் 52 வார உயர்வான 2,297.65 ரூபாய்க்கு நெருங்கியது. இன்று அதிகப்படியாக 2,291.65 ரூபாய் அளவீட்டை எட்டியது.
லார்சன் & டூப்ரோ நிறுவனம் வளைகுடா நாடுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் பொறியியல், கொள்முதல், கட்டுமானம் மற்றும் பல்வேறு புதிய கடல்சார் வசதிகளுக்கான கட்டமைப்புகள் புதிதாக உருவாக்கவும், ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது என L&T வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவைகள் : இந்த ஒப்பந்தம் குறித்து L&T இன் முழு நேர இயக்குநரும், மூத்த செயல் துணைத் தலைவருமான சுப்பிரமணியன் சர்மா கூறுகையில் "LTEH ஆஃப்ஷோர் நிறுவனம் வடிவமைப்பு, புனையமைப்பு மற்றும் பெரிய செயல்முறை தளங்கள், குடியிருப்புகள், நீர்மூழ்கிக் கடல் அமைப்புகளை நிறுவுதல் உள்ளிட்ட எண்ட் டூ எண்ட் தயாரிப்புகளை சரியான நேரத்தில் வாடிக்கையாளருக்கு கொடுத்து, வணிகத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் செயல்படும்" என கூறியுள்ளார்.
தொடர் வளர்ச்சி : இந்த தொடர்ச்சியான ஆர்டர்களை பெறுவது நிறுவனத்தின் சிறப்பான வேலைகளால், வாடிக்கையாளர் பெற்றுள்ள திருப்தியைக் குறிக்கிறது மற்றும் இந்தத் திறன்களை மேம்படுத்துவதற்கும் வளர்ப்பதற்கும் குழுவின் அர்ப்பணிப்பு முயற்சிகளும் வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெறுவதற்கு காரணமாகும் எனவும் சர்மா கூறியுள்ளார்.
சர்வதேச ஒப்பந்தம் : லார்சன் & டூப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லார்சன் & டூப்ரோ பல உள்நாட்டு மற்றும் சர்வதேச கடல்சார் திட்டங்களைச் செயல்படுத்துகிறது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ளூர் திறன்கள் மற்றும் திறமைகளை வளர்ப்பதன் மூலம், உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுடன் ஈடுபாட்டை மேம்படுத்தி உலக அளவில் வணிகத்தை கொண்டு செல்ல ஒரு உந்துகோலாக உள்ளது என தெரிவித்துள்ளது.

பெரிய டீல் : முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் , அதன் முதல் ஒருங்கிணைந்த O&M ஒப்பந்தத்தை வேதாந்தா லிமிடெட், கெய்ர்ன் ஆயில் & கேஸ் பிரிவிலிருந்து பெற்றது குறிப்பிடத்தக்கது. ஒரு நிறுவனம் ரூ.1000 கோடி முதல் ரூ.2500 கோடி வரை ஒரு ஒப்பந்தத்தை பெற்றால் அது ஒரு குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் எனக் கூறப்படுகிறது. அதே ரூ.2,500 கோடியிலிருந்து ரூ.7000 கோடி வரை பெற்றால் அது பெரிய திட்டம் எனப்படும். அதே ஒரு நிறுவனம் ரூ.7000 கோடி அல்லது அதற்கும் மேல் டீலை பெற்றால் அது மெகாத் திட்டம் எனக் கூறப்படுகிறது.
பங்கின் விலை அதிரடி உயர்வு : இந்த ஒப்பந்தம் குறித்த செய்தி வெளியானதை அடுத்து L&T இன் ஒரு பங்கின் விலை ஒரே நாளில் 4.09% உயர்ந்து ரூ.2,259.00 ஆக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் L&T பங்குகள் சுமார் 8.79 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் EPC திட்டங்கள், ஹைடெக் உற்பத்தி மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். மேலும் இந்நிறுவனம் உலகளவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications